\
Australia Travis Head joins with second straight Allan Border Medal
Travis Headreuters

1 வாக்கு வித்தியாசம்.. சக நண்பரை வீழ்த்திய டிராவிஸ் ஹெட்.. 2ஆவது முறையாக விருது!

ஒருநாள் கிரிக்கெட்டிலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 142 ரன்கள் விளாசியது உட்பட ஆஸ்திரேலிய அணியின் முன்னணி ரன் குவிப்பாளராகத் திகழ்ந்தார்.
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் (Travis Head), அந்நாட்டின் உயரிய விருதான ஆலன் பார்டர் விருதை (Allan Border Medal) தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகப் பெற்று சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்டரான டிராவிஸ் ஹெட் தனது நெருங்கிய நண்பரான விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்த விருதைப் பெற்றுள்ளார்.

Travis Head
Travis Headreuters

ஜனவரி 29, 2025 முதல் ஜனவரி 8, 2026 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற போட்டிகளின் வாக்கெடுப்பு அடிப்படையில், ஹெட் மிக (153 வாக்குகள்) அதிக வாக்குகளைப் பெற்றார். அலெக்ஸ் கேரி அவருக்குக் கடுமையான சவாலை அளித்து நூலிழையில் இரண்டாவது இடத்தைப் (152) பிடித்தார். அதேவேளையில், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஹெட்டை விட மூன்று வாக்குகள் (150) குறைவாகப் பெற்று மூன்றாவது இடத்தை எடுத்தார்.

இதன் மூலம், ஆஸ்திரேலியாவின் இந்த உயரிய தனிநபர் கிரிக்கெட் விருதை அடுத்தடுத்த ஆண்டுகளில் வெல்லும் ஐந்தாவது வீரர் என்ற பெருமையை டிராவிஸ் ஹெட் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ரிக்கி பாண்டிங், ஷேன் வாட்சன், மைக்கேல் கிளார்க் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் ஆலன் பார்டர் விருதைப் பெற்றிருந்தனர். டிராவிஸ் ஹெட், 2025-26 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 5 போட்டிகளில் 62.90 சராசரியுடன் 629 ரன்கள் குவித்தார்.

Travis Head
Travis Headreuters

இதில் 3 சதங்களும் (பெர்த் - 123, அடிலெய்ட் - 170, சிட்னி - 163) அடங்கும். ஆஷஸ் தொடர் மட்டுமின்றி, ஒருநாள் கிரிக்கெட்டிலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 142 ரன்கள் விளாசியது உட்பட ஆஸ்திரேலிய அணியின் முன்னணி ரன் குவிப்பாளராகத் திகழ்ந்தார். இந்த விருது பெற்றது குறித்து டிராவிஸ் ஹெட், “என்னிடம் இரண்டு பதக்கங்கள் உள்ளன என்பதை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் 20 ஆண்டுகள் கழித்து, எனது குழந்தைகள் இதைப் பார்க்கும்போது என்னால் இதைப் பற்றி அவர்களிடம் பெருமையுடன் பேச முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com