கடைசி 3 பந்துக்கு 17 ரன்கள் தேவை! விடாமல் போராடிய வெஸ்ட் இண்டீஸ்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இறுதிவரை போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Aus vs WI
Aus vs WIICC

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

முதலில் தொடங்கப்பட்ட 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா முதல் போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் ஒரு அசாத்தியமான பந்துவீச்சு மூலம் அசத்திய ஷமர் ஜோசப் 1-1 என டெஸ்ட் தொடரை சமனில் முடித்துவைத்தார்.

27 வருடங்களுக்கு பிறகு முதன்முதலாக ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்றது மட்டுமல்லாமல், பல வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை சமன்செய்து புது வரலாறு படைத்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

ஆனால் என்னதான் டெஸ்ட் தொடரை சமன்செய்திருந்தாலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் வென்ற ஆஸ்திரேலியா அணி, 3-0 என ஒயிட்வாஸ் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது டி20 போட்டி ஹோபர்ட்டில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இரண்டு அணிகளும் இறுதிவரை போட்டியை விட்டுக்கொடுக்காமல் உயிரை கொடுத்து போராடின.

36 பந்தில் 70 ரன்கள் குவித்த வார்னர்!

முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர் தன்னுடைய 100-வது டி20 போட்டியில் களமிறங்கினார்.

தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை ஆடிய டேவிட் வார்னர் வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை சிதறடித்தார். வெறும் 36 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகள், 1 சிக்சர் என துவம்சம் செய்து 70 ரன்கள் குவித்து அசத்தினார்.

david warner
david warner

வார்னருடன் களத்தில் தீயாக விளையாடிய ஜோஸ் இங்கிலிஸ் 39 ரன்களும், அடுத்தடுத்து களமிறங்கிய டிம் டேவிட் மற்றும் வேட் இருவரும் 37 மற்றும் 21 ரன்கள் என அடிக்க 20 ஓவர் முடிவில் 213 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா அணி.

Aus vs WI
நூலிழையில் தோல்வி! கண்ணீர்விட்ட பாகிஸ்தான் வீரர்கள்! ஆஸி த்ரில் வெற்றி; ஃபைனலில் இந்தியா உடன் மோதல்!

கடைசிஓவர் வரை விடாமல் போராடிய வெஸ்ட் இண்டீஸ்!

214 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிராண்டன் கிங், ஜான்சன் சார்லஸ் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ’நீங்க எந்த அணியாக வேண்டுமானாலும் இருக்கலாம் டி20 கிரிக்கெட் என வந்துவிட்டால் நாங்கள் தான்’ என்று விளையாடிய விண்டீஸ் அணி 9 ஓவர்களுக்கு 90 ரன்களை கடந்து மிரட்டியது. தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதத்தை நெருங்க விக்கெட்டை தேடி ஆடம் ஷாம்பாவிடம் பந்தை கொடுத்தார் ஆஸ்திரேலியா கேப்டன்.

பிரண்டன் கிங்
பிரண்டன் கிங்

பிரண்டன் கிங் அரைசதமடித்து அசத்த, 43 ரன்களில் களத்தில் இருந்த சார்லஸை ஒருவழியாக வெளியேற்றி முதல் விக்கெட்டை எடுத்துவந்தார் ஷாம்பா. உடன் பிரண்டன் கிங்கை 53 ரன்னில் ஸ்டொய்னிஸ் வெளியேற்ற, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் மற்றும் ரோவ்மன் பவல் இருவரும் அடுத்தடுத்து 4 சிக்சர்களை பறக்கவிட்டு ரன்களை எடுத்துவந்தனர். ஆனால் மீண்டும் பந்துவீச வந்த ஷாம்பா பூரனை வெளியேற்ற, மேக்ஸ்வெல் பவல்லை வெளியேற்றி அசத்தினார். தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸலை, ஷாம்பா ஸ்டம்பை தகர்த்து அனுப்பி வைத்தார்.

ஆடம் ஷாம்பா
ஆடம் ஷாம்பா

ஷாம்பாவின் சுழலில் சிக்கி தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணியை, கடைசியாக களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் மீண்டெடுக்கும் முயற்சியில் காட்டடியில் இறங்கினார். 15 பந்துகளை எதிர்கொண்ட ஜேசன் ஹோல்டர் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என விரட்டி 34 ரன்கள் குவிக்க ஆட்டம் சூடுபிடித்தது.

கடைசி 6 பந்துக்கு 27 ரன்கள் என போட்டி மாற, முதல் மூன்று பந்துகளில் ஒரு சிக்சர், பவுண்டரி என விரட்டிய ஜேசன் ஹோல்டர், ஆட்டத்தை கடைசி 3 பந்துகளுக்கு 17 ரன்கள் என மாற்றினார். 4-வது பந்தை யார்க்கராக வீசிய அப்பாட் 3 ரன்களை மட்டும் விட்டுக்கொடுக்க, ஜேசன் ஹோல்டர் நான் ஸ்டிரைக்கிற்கு சென்றார். பின்னர் கடைசி 2 பந்துகளை எதிர்கொண்ட அக்கீல் ஹொசெய்ன், 2 ரன்களை மட்டுமே எடுக்க ஆஸ்திரேலியா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

எதிர்வரும் 2024 டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் ஒரு ஸ்ட்ராங்கான அணியை கட்டமைத்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றாலும், மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் சவால் தர வெஸ்ட் இண்டீஸ் காத்திருக்கின்றது.

Aus vs WI
முதல் ஆஸி.வீரராக டேவிட் வார்னர் படைத்த பிரத்யேக சாதனை! கோலி, ராஸ் டெய்லருக்கு பின் 3-வது வீரர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com