இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் முழு கவனம் செலுத்தி விளையாடிவந்த நிலையில், மற்ற நாட்டு வீரர்கள் சிலர் தங்களுடைய அணிக்காக விளையாடுவதற்காக ஐபிஎல்லில் பங்கேற்காமல் தவிர்த்திருந்தனர். அந்த வரிசையில் பின் ஆலன், க்ளென் பிலிப்ஸ், ஷாகிப் அல்ஹசன், லிட்டன் தாஸ் முதலிய பல வீரர்களும், மிட்சல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் முதலிய ஆஸ்திரேலிய வீரர்களும் ஐபிஎலை தவிர்த்துவிட்டு சொந்த நாட்டிற்கு திரும்பினர். ஆஸ்திரேலியா வீரர்களின் இந்த அர்ப்பணிப்பு தான் தற்போது அவர்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டைட்டிலை கைப்பற்றி தந்துள்ளது.
ஐபிஎல்லில் கவனம் செலுத்தியதால் தான் இந்தியாவால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல முடியவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒரு பிரான்சைஸ் அணிக்கு விளையாடுவது பற்றியும், தேசிய அணிக்கு விளையாடுவது பற்றியும் பேசியிருக்கும் ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க், ஆஸ்திரேலியாவிற்கு விளையாடுவது தான் தன்னுடைய முதல் விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசியிருக்கும் மிட்சல் ஸ்டார்க், "நான் ஐபிஎல்லில் விளையாடுவதை ரசித்தேன். அதேபோல் 10 ஆண்டுகளுக்கு முன்பு யார்க்சைரில் விளையாடிய போதும் அனுபவித்து விளையாடினேன். ஆனால், இது எல்லாவற்றையும் தாண்டி ஆஸ்திரேலியாவிற்காக விளையாடுவது தான் எப்போதும் எனக்கு முதன்மையானதாக இருக்கும். நான் எதற்காகவும் வருத்தப்படவில்லை, பணம் வரும் போகும். ஆனாலும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்காக நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நூறு ஆண்டுகளுக்கும் மேலான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியவர்களின் எண்ணிக்கை 500க்கும் குறைவானது தான். அதில் பங்கேற்று விளையாடுவதே மிகவும் சிறப்பு வாய்ந்தது. என்னுள் இருக்கும் பாரம்பரியவாதி இன்னும் ஒரு தலைமுறையினர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தவே விரும்புவார்கள் என்று நம்புகிறான். ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் பணம் எளிதாக கிடைக்கும் ஒருவழியாகவும், விரைவாக புகழை அடையும் ஒரு வழியாகவும் மட்டுமே இருக்கிறது" என்று கூறினார்.
தொடர்ந்து “நான் நிச்சயமாக மீண்டும் ஐபிஎல்லில் விளையாட விரும்புகிறேன். ஆனால் நீண்ட காலமாக எனது குறிக்கோள் என்பது ஆஸ்திரேலியாவுக்காக சிறந்த விளையாட்டை கொடுக்க வேண்டும் என்பதாகவே இருக்கும். அது எந்த வடிவமாக இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சி" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.