POOR CAPTAINCY.. 10வது Wk-க்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப்.. கோட்டைவிட்டது SA! 282 ரன்கள் இலக்கு!
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடினமாக சண்டையிட்டு வருகிறது தென்னாப்பிரிக்கா அணி.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வெப்ஸ்டர் இருவரின் அரைசதத்தின் உதவியால் 212 ரன்கள் சேர்த்தது. அபாரமாக பந்துவீசிய ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதற்குபிறகு முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸின் மிரட்டலான பந்துவீச்சால் 138 ரன்களுக்கே சுருண்டு தத்தளித்து வருகிறது. 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் பாட் கம்மின்ஸ்.
வாய்ப்பை கோட்டைவிட்ட தென்னாப்பிரிக்கா..
முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி, எப்படியும் வலுவான இலக்கை நிர்ணயிக்கப்போகிறது என்ற எண்ணமே எல்லோருக்கும் இருந்தது. ஆனால் ’இருங்க பாய்’ மொமண்ட்டை எடுத்துவந்த தென்னாப்பிரிக்கா பவுலர் விக்கெட் வேட்டை நடத்திவருகின்றனர்.
ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தி ரபாடா அசத்த, முதல் இன்னிங்ஸில் அரைசதங்கள் அடித்த ஸ்மித் மற்றும் வெப்ஸ்டர் இருவரையும் அவுட்டாக்கி மிரட்டினார் லுங்கி இங்கிடி. இருவரின் அபாரமான பந்துவீச்சால் 73 ரன்னுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து போராடியது ஆஸ்திரேலியா.
எப்படியும் இங்கிருந்து தென்னாப்பிரிக்கா அடுத்த 20 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்திவிடும் 170 ரன்கள் டார்க்கெட் என்றால் கூட 27 வருட கோப்பையை தென்னாப்பிரிக்கா எட்டிவிடும் என்ற எண்ணமே எல்லோருக்கும் இருந்தது.
மோசமான கேப்டன்சி.. கோட்டைவிட்ட தென்னாப்பிரிக்கா!
ஆனால் கேப்டன்சியில் கோட்டைவிட்ட டெம்பா பவுமா, டெய்ல் எண்டர் வீரர்களுக்கு எதிராக அட்டாக்கிங் ஃபீல் செட்டை வைத்து அழுத்தத்தை போடுவதிலும், சரியான பௌலிங் சேஞ்ச் செய்வதிலும் கோட்டைவிட்டார். ஒருபக்கம் மிட்செல் ஸ்டார்க் ஈசியாக ஒன்று இரண்டு ரன்களை எடுக்க, மறுமுனையில் அதிரடியாக பேட்டிங் செய்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 50 பந்தில் 43 ரன்கள் அடித்தார்.
அவர் அவுட்டான பிறகாவது விக்கெட்டை எடுத்துவருவார்கள் என்று நினைத்தபோது, 10வது விக்கெட்டுக்கு மட்டும் ஆஸ்திரேலியா அணி 22 ஓவர்கள் பேட்டிங் செய்தது. கடைசி விக்கெட்டுக்கு 59 ரன்களை சேர்த்த ஆஸ்திரேலியா ஜோடி மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹசல்வுட் இருவரும் 281 ரன்கள் முன்னிலை என்ற வலுவான இலக்கிற்கு எடுத்து சென்றனர். ஸ்டார்க் அரைசதமடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கேப்டன்சி, பந்துவீச்சு இரண்டிலும் கோட்டைவிட்ட தென்னாப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி போன்ற அழுத்தம் நிறைந்த போட்டியில் 282 ரன்களை இலக்காக கொண்டு விளையாடவிருக்கிறது. 27 வருட கோப்பை கனவை நிறைவேறுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..