
இன்றைய உலகக்கோப்பை போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக மோதிய ஆஸ்திரேலிய அணி ஒரே போட்டியில் பல சாதனைகளை குவித்து அசத்தியுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 399 ரன்களை குவித்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஸ் விரைவாகவே வெளியேறி ஏமாற்றம் அளித்தாலும், பின்னர் கைக்கோர்த்த டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடந்த போட்டியில் சதமடித்திருந்த டேவிட் வார்னர் இந்த போட்டியிலும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். உடன் ஸ்மித்தும் தன்னுடைய பங்கிற்கு வெளுத்துவாங்க ஆரம்பிக்க, நெதர்லாந்து அணி அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்தது. 11 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி சதம் விளாசிய டேவிட் வார்னர், உலகக்கோப்பையில் தன்னுடைய 6வது சதத்தை பதிவுசெய்தார்.
இதன்மூலம் உலகக்கோப்பையில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 6 சதங்கள் அடித்திருந்த சச்சினின் சாதனையை சமன்செய்துள்ளார் வார்னர். அதுமட்டுமல்லாமல் 7 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கும் ரோகித் சர்மாவை பீட் செய்ய இன்னும் 1 சதம் மட்டுமே வார்னருக்கு மீதமுள்ளது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்மித 71 ரன்னிலும், மார்னஸ் லபுசனே 62 ரன்னிலும் வெளியேற, கடைசி 10 ஓவர்களின் போது களத்திற்கு வந்த க்ளென் மேக்ஸ்வெல் ஒரு வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட்டாக இருந்துவரும் க்ளென் மேக்ஸ்வெல் காயத்திலிருந்து திரும்பி வந்த பிறகு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வந்தார். இந்நிலையில் இன்றைய போட்டியில் களமிறங்கிய மேக்ஸ்வெல் அவர்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் 7 பந்துகளில் 14 ரன்களில் இருந்த மேக்ஸ்வெல் அடுத்த 33 பந்துகளில் 87 ரன்கள் விளாசி துவம்சம் செய்தார். எதிர்கொண்ட ஓவரில் எல்லாம் 15 ரன்களுக்கு மேல் அடித்த மேக்ஸ்வெல், பாஸ் டி லீடே வீசிய 49வது ஒவரில் மட்டும் 28 ரன்கள் விளாசி மிரட்டிவிட்டார்.
9 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய மேக்ஸ்வெல், 40 பந்துகளில் சதமடித்து உலகக்கோப்பையில் புதிய சாதனையை உருவாக்கினார். உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட சதம் இதுவாகும். நடப்பு உலகக்கோப்பை தொடரில் 49 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்திருந்த மார்க்ரம் சாதனையை, 18 நாளிலேயே முறியடித்து அசத்தியுள்ளார் மேக்ஸ்வெல். முதல் இன்னிங்ஸின் முடிவில் 399 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி.
400 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணியில், அழுத்தத்தை சரியாக கையாளாத வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்டார்க், ஹசல்வுட், கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்த, மிடில் ஆர்டர் வீரர்களை மிட்செல் மார்ஸ் மற்றும் ஆடம் ஷாம்பா இருவரும் தகர்த்தனர். மிட்செல் மார்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்த, ஆடம் ஷாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டி விட்டார். இந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம், தொடர்ச்சியாக 3 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் ஆடம் ஷாம்பா.
90 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நெதர்லாந்து அணி, 309 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது ஆஸ்திரேலியா அணி. அந்த கடந்த 2015-ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக படைத்திருந்த 275 ரன்கள் என்ற ரெக்கார்டை உடைத்து, அதன் சொந்த சாதனையை பின்னுக்கு தள்ளி புதிய சாதனையை படைத்து அசத்தியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் இது இரண்டாவது மிகப்பெரிய வெற்றியாகும்.