ஷமர் ஜோசப் 9 விக்.. ஹசல்வுட் 7 விக்.. 3 நாளுக்குள் முடிந்த முதல் டெஸ்ட்! WI-ஐ தோற்கடித்தது ஆஸி!
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி, 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுன் பார்படாஸ் மைதானத்தில் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இரண்டு அணி பந்துவீச்சாளர்களும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சூழலில் முதல் டெஸ்ட் போட்டியானது 3 நாட்களுக்குள் முடிவை எட்டியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்னுக்கு ஆஸ்திரேலியாவை சுருட்டி வலுவான தொடக்கத்தை பெற்றபோதும் பரிதாபமாக தோல்வியை தழுவியது. இதில் வெஸ்ட் இண்டீஸின் ஷமர் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ் 9 விக்கெடுகள் மற்றும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
ஹசல்வுட்டின் 5 விக்கெட்டால் ஆஸ்திரேலியா வெற்றி!
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 180 ரன்னுக்கு சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஷமர் ஜோசப் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 190 ரன்னுக்கு சுருண்டது. மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
10 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா 65 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சூழலில் ஆஸ்திரேலியா 150 ரன்னுக்குள் சுருண்டுவிடும் வெஸ்ட் இண்டீஸ் அணியே வெற்றிபெறும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.
ஆனால் மிடில் ஆர்டர் வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி மற்று வெப்ஸ்டர் 3 பேரும் அரைசதங்கள் அடித்து அசத்த 310 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா.
மிகப்பெரிய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் ஹசல்வுட்டின் அபாரமான பந்துவீச்சால் 141 ரன்களுக்கே சுருண்டது. ஹசல்வுட் 5 விக்கெட்டுகள் வீழ்த்த 159 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியை தழுவியது. இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதமடித்த டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.