வெறும் 20 பந்துகள் வீச 34,000 கி.மீ. பறக்கும் ஆஸி. பவுலர்.. ஏன் தெரியுமா?
ஆஸ்திரேலியாவின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா, 'The Hundred' தொடரில் ஓவல் இன்பின்சிபிள்ஸ் அணிக்காக 20 பந்துகள் வீச 34,000 கி.மீ. பறக்கவுள்ளார். ரஷீத் கான் தன் நாட்டு அணிக்காக சென்றதால், ஜம்பா அவசரமாக அழைக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து லண்டன் வரை 30 மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 100 பந்து கொண்ட ஆண்களுக்கான ‘The Hundred’ கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்று விளையாடிய இந்தத் தொடரில், ஓவல் இன்பின்சிபிள்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டி நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. அதேநேரத்தில் தகுதிநீக்கச் சுற்றில், புள்ளிகள் பட்டியலில் 2ஆவது மற்றும் 3 ஆவது இடம்பிடித்த நார்தன் சூப்பர் சார்ஜர்ஸ் - டிரென்ட் ராக்கெட்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் வெற்றிபெறும் அணி, ஓவல் இன்பின்சிபிள்ஸ் அணியுடன் மோதும். இந்த நிலையில், ஓவல் இன்பின்சிபிள்ஸ் அணியில் ஆஸ்திரேலியாவின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா கடைசி நேரத்தில் அழைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இந்த அணியில் ஆப்கானிஸ்தான் லெக்-ஸ்பின்னர் ரஷீத் கான் இடம்பெற்றிருந்தார். அவர், தற்போது தன் நாட்டு அணிக்காக விளையாடச் சென்றுவிட்டார்.
இதையடுத்து, கடந்த ஒரு மாதமாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடிவந்த ஜம்பா, அந்த இடத்தைப் பூர்த்திசெய்யும் விதத்தில் அழைக்கப்பட்டுள்ளார். அவர், தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்திற்கு பறக்கவுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து லண்டன் சுமார் 34 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ளது. விமானத்தில் செல்ல வேண்டுமென்றால் 30 மணி நேரம் ஆகுமாம். அதிலும், அவர் இந்தப் போட்டியில் வெறும் 20 பந்துகள் வீச மட்டுமே செல்ல இருக்கிறார். இந்தத் தொடரில் பந்துவீச்சாளர் ஒருவர் 20 பந்துகள் மட்டுமே வீச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 20 பந்துகள் வீச ஆடம் ஜம்பா, 34 ஆயிரம் கி.மீ. பறந்து செல்ல உள்ளார். மறுபுறம், ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்குகிறது. ஒருவேளை முதல் போட்டியில் ஜம்பா விளையாடுவதாக இருந்தால், லண்டனில் இருந்து உடனடியாக நியூசிலாந்துக்கு செல்ல வேண்டியதாக இருக்கும்.