பாகிஸ்தானிடம் சரணடைந்த ஆஸ்திரேலியா.. 108 ரன்னில் சுருண்டு படுதோல்வி!
பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 108 ரன்னில் சுருண்டு, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என பாகிஸ்தான் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா 76 ரன்கள் குவித்தார். அப்ரார் அகமது 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த வெற்றி டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு நம்பிக்கையை அதிகரிக்கிறது.
2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது.
பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா 40 பந்தில் 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 76 ரன்கள் குவித்து அசத்தினார்.
199 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட நிலைத்து நின்று ஆடவில்லை. அதிகபட்சமாக காம்ரூன் கிரீன் 35 ரன்கள் அடித்தார். 54 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா, 15.4 ஓவரிலேயே 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய அப்ரார் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளை வென்ற பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியது. டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்த தொடர் வெற்றி பாகிஸ்தானுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது.

