NZvAUS | 2019 ஃபைனலை கண்முன் காட்டிய நீஷம்! வீணான போராட்டம்! 5 ரன்களில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது ஆஸ்திரேலியா அணி.
NZvAUS |
NZvAUS |Twitter

தரம்சாலாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஆஸ்திரேலியா நிர்ணயித்த 389 ரன்களை நோக்கி விளையாடியது நியூசிலாந்து அணி.

முதல் உலகக்கோப்பை போட்டியில் சதமடித்து அசத்திய ஹெட்!

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் களமிறங்கிய டிராவிச் ஹெட் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 10 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டிய ஹெட், முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.

டிராவிஸ் ஹெட்
டிராவிஸ் ஹெட்

மறுமுனையில் தன்னுடைய பங்கிற்கு வெளுத்துவாங்கிய டேவிட் வார்னர் 6 சிக்சர்களை பறக்கவிட்டு 81 ரன்கள் அடிக்க, முதல் விக்கெடுக்கே 175 ரன்களை சேர்த்தது ஆஸ்திரேலியா அணி. ஹெட் 109 ரன்னிலும், வார்னர் 81 ரன்னிலும் அவுட்டாகி வெளியேற அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஸ், ஸ்மித், லபுசனே மூவரும் தொடக்கம் கிடைத்தும் விரைவாகவே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.

க்ளென், கம்மின்ஸ் அதிரடியில் 388 ரன்கள் குவிப்பு!

பின்னர் களமிறங்கிய அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் குறைவான பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு ஆட்டத்தையே தலைகீழாக மாற்றினார். 24 பந்தில் 41 ரன்கள் அடித்து மேக்ஸ்வெல் வெளியேற, இறுதியாக களத்திற்கு வந்த ஜோஸ் இங்கிலீஸ் மற்றும் பாட் கம்மின்ஸ் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

பாட் கம்மின்ஸ்
பாட் கம்மின்ஸ்

ஜோஸ் இங்கிலீஸ் 4 பவுண்டரிகள் விரட்ட, பாட் கம்மின்ஸ் 4 சிக்சர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். 49.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 388 ரன்களை குவித்தது.

தனி ஆளாக நின்று சதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா!

389 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்கவீரர்களும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். நல்ல தொடக்கத்தை கொடுத்த டெவான் கான்வே மற்றும் வில் யங் ஜோடியை, அடுத்தடுத்து வெளியேற்றி அசத்தினார் ஹசல்வுட். 72 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாந்து அணியை, அதற்கு பிறகு கைக்கோர்த்த ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் இருவரும் மீட்க போராடினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினர். 96 ரன்கள் என்ற இந்த நல்ல பார்ட்னர்ஷிப்பை 51 ரன்னில் மிட்செல்லை வெளியேற்றி முடிவுக்கு கொண்டுவந்தார் ஆடம் ஷாம்பா.

ரச்சின்
ரச்சின்

பின்னர் வந்த கேப்டன் பொறுப்பை உணராமல் ரிவர்ஸ் ஷாட் ஆடி வெளியேற, 23 வயதேயான ரச்சின் ரவீந்திரா பொறுப்பை தன் தோளில் சுமந்து விளையாடினார். சுமாரான பந்துகளை எல்லாம் சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்ட ரச்சின், நிதானமாக அடுத்த பந்தில் எல்லாம் சிங்கிள் எடுத்து பெரிய இலக்கை நோக்கி எப்படி விளையாட வேண்டும் என பாடம் புகட்டினார். 9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என பறக்கவிட்ட ரச்சின் இந்த உலகக்கோப்பையில் தன்னுடைய 2வது உலகக்கோப்பை சதத்தை எடுத்துவந்தார். சிறப்பாக விளையாடிய ரச்சினை ஒரு அற்புதமான ஸ்லோவர் டெலிவரியில் ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் 116 ரன்னில் வெளியேற்றி அசத்தினார்.

கடைசிவரை போராடிய நீஷம்! த்ரில் வெற்றிபெற்ற ஆஸி!

விறுவிறுப்பான போட்டியில் வெற்றிக்காக போராடிய ஜேமிஸ் நீஷம் ஆஸ்திரேலியாவை கதிகலங்க வைத்தார். விக்கெட்டுகள் ஒருபுறம் போனாலும், தன் நாட்டை வெற்றிக்காக அழைத்துச்செல்ல வேண்டும் என துடித்த நீஷம் சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி போட்டியை கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் விளையாடினார். கடைசி ஓவரில் 6 பந்துக்கு 19 ரன்கள் என போட்டி மாற, ஒயிடு பந்தில் பவுண்டரி வழங்கிய மிட்செல் ஸ்டார்க் நியூசிலாந்து அணிக்கான வாய்ப்பை திறந்துவிட்டார்.

நீஷம்
நீஷம்

கடைசிவரை களத்தில் நின்ற நீஷம் 2 பந்துக்கு 7 ரன்கள் என போட்டியை மாற்ற, ஆட்டம் அனல்பறந்தது. ஒரு சிக்சரை விரட்டினால் போதும் வெற்றி பெற்றுவிடலாம் என போராடிய நீஷம், நல்ல ஃபுல்டாஸ் பந்து கிடைத்தும் கோட்டைவிட்டார். கோட்டைவிட்டது மட்டுமல்லாமல் ரன் அவுட்டாகி வெளியேறினார். முடிவில் ஆஸ்திரேலியா 5 ரன்களில் த்ரில் வெற்றிபெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com