முதல் டி20 போட்டி | டிராவிஸ் ஹெட், அபாட் அசத்தல்.. 28 ரன்களில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி சௌதாம்ப்டன் நகரில் நேற்றிரவு நடந்தது. ஒருசில முன்னணி வீரர்கள் இல்லாத இங்கிலாந்து அணிக்கு ஃபில் சால்ட் தலைமை தாங்கினார்.
டாஸ் வென்ற சால்ட் பந்துவீச்சை தேர்வு செய்ய ஓப்பனர்களாகக் களமிறங்கிய மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட் இருவரும் அடித்து நொறுக்கினார்கள். பவர்பிளேவில் இருவரும் பௌண்டரி மழையாகப் பொழிந்து தள்ளினார்கள். அதிலும் டிராவிஸ் ஹெட் சிக்ஸர்களாக விளாசினார். 19 பந்துகளிலேயே அரைசதம் கடந்த அவர், அதன்பின்னும் அதே வகையில் தான் ஆட்டத்தை எதிர்கொண்டார். கடைசியில் பவர்பிளேவின் கடைசிப் பந்தில் ஷாகிப் மஹ்மூத் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார் அவர். அந்த அபாரமான ஆட்டத்தால் பவர்பிளேவில் மட்டும் 86 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.
ஒரு அதிரடியான தொடக்கம் கிடைத்த பிறகு அதை ஆஸ்திரேலியாவால் நல்லபடியாக அதை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஷாகிப் மஹமூத், அதில் ரஷீத், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசியதால் மிடில் ஒவர்களில் இங்கிலாந்தின் கை ஓங்கியது. ஜாஷ் இங்லிஸ் (37 ரன்கள்) தவிர்த்து வேறு யாராலும் நல்ல ஸ்கோரும் எடுக்க முடியவில்லை, நல்ல ஸ்டிரைக் ரேட்டிலும் ஸ்கோர் செய்ய முடியவில்லை. இறுதியில் 19.3 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா.
லியாம் லிவிங்ஸ்டன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷாகிப் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
180 என்ற இலக்கை சேஸ் செய்த இங்கிலாந்து அணிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. 2வது ஓவரின் முதல் பந்தில் வில் ஜேக்ஸை வெளியேற்றினார் ஹேசில்வுட். சால்ட் (12 பந்துகளில் 20 ரன்கள்), ஜோர்டன் காக்ஸ் (12 பந்துகளில் 17 ரன்கள்), லிவிங்ஸ்டன் (27 பந்துகளில் 37 ரன்கள்) என அவர்களின் டாப் ஆர்டர் ஓரளவு நன்றாகவே ரன் சேர்த்தனர். ஆனால் அவர்களால் அதை பெரிய ஸ்கோர்களாக மாற்ற முடியவில்லை.
ஆஸ்திரேலியாவின் பேஸ், ஸ்பின் என இரண்டு யூனிட்டுமே நன்றாகவே செயல்பட்டது. சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி இறுதியில் 19.2 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதனால் ஆஸ்திரேலியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். ஆடம் ஜாம்பா, ஹேசில்வுட் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
23 பந்துகளில் 59 ரன்கள் (8 ஃபோர்கள், 4 சிக்ஸர்கள்) விளாசி ஆஸ்திரேலியாவுக்கு அபார தொடக்கம் கொடுத்ததோடு இந்தப் போட்டியில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ், "டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட் இருவரும் ஆடியதைப் பார்த்தபோது அட்டகாசமாக இருந்தது. எப்படியும் 200 ரன்கள் கூட எடுக்க முடியும் என்று நினைத்திருந்தேன். அதை அடைய மிகவுமே முயற்சி செய்தோம். அதேசமயம் ஹேசில்வுட், ஜாம்பா போன்ற வீரர்கள் இந்த அணியில் இருப்பது எங்களுக்குக் கிடைத்திருக்கும் அதிர்ஷ்டம். அது நிச்சயம் 200 ரன்கள் அடிக்கக்கூடிய விக்கெட் தான். ஹெட் அதிரடியாக ஆடும்போது அங்கு சூழ்நிலை என்பது முக்கியமே இல்லை" என்று கூறினார்.
இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி கார்டிஃப் நகரில் நாளை இரவு 11 மணிக்கு நடக்கிறது.