ஆசியக்கோப்பை: பந்துவீச்சில் மிரட்டிய பாகிஸ்தான்.. இரண்டு வீரர்களால் நிமிர்ந்த இந்தியா!

ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு 267 ரன்களை, இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன்
ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன்ட்விட்டர்
Published on

ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்கு பெற்றுள்ள 16வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே பாகிஸ்தான் - இந்தியா இடையிலான லீக் போட்டி, இன்று (செப்டம்பர் 2) தொடங்கியது. இந்தப் போட்டி இலங்கை கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். அதன்படி, தொடக்க பேட்டர்களாக கேப்டன் ரோகித்தும் சுப்மன் கில்லும் களமிறங்கினர். இருவரும் பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிதுநேரம் தடைப்பட்டது. அப்போது இந்திய அணி 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்தது.

ட்விட்டர்

பின்னர் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கேப்டன் ரோகித் ஆட்டமிழந்தார். சாஹீன் அப்ரிடி அவரை போல்டாக்கி வெளியேற்றினார். 11 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் வெளியேறினார். அவருக்குப் பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி, கில்லுடன் இணைந்தார். அவரும் ஒரு பவுண்டரி அடித்த நிலையில், அதே சாஹீன் அப்ரிடி பந்துவீச்சில் போல்டாகி வந்தவேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.

ட்விட்டர்

தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டை ஹரிஷ் ராஃப் வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தார். இதனால் இந்திய அணி தொடக்கத்திலேயே நிலைகுலைந்தது. குறிப்பாக, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் மிரட்டினர். மறுபுறம், இந்திய அணிக்கு மழையும் சோதனையாக அமைந்தது.

மீண்டும் மழை குறுக்கிட்டபோது, இந்திய அணி 11.2 ஓவர்களில் 51 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்தது. அதற்குப் பிறகு கில்லும் விக்கெட்டை இழந்ததால், இந்திய அணியின் நிலைமை படுமோசமாக இருந்தது. ஒருகட்டத்தில் இந்திய அணி 200 ரன்களையாவது கடக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. அந்தச் சூழலில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனும், ஹர்திக் பாண்டியாவும் கைகோர்த்தனர். அவர்கள் இணைந்து அணியைச் சரிவிலிருந்து அழைத்துச் சென்றனர்.

ட்விட்டர்

அவர்கள் இருவரும் பொறுமையாக ஆடியதுடன், ஏதுவான பந்துகளை பவுண்டரி எல்லைக்கும் விரட்டினர். அவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 200 ரன்களையும் கடந்து சென்றது. இறுதியில் இஷான் கிஷன் 82 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 87 ரன்களிலும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். இஷான் தன்னுடைய ரன்களில் 9 பவுண்டரி, 1 சிக்ஸரையும், பாண்டியா 7 பவுண்டரி, 1 சிக்ஸ்ரையும் விரட்டியிருந்தனர். இறுதியில் ரவீந்திர ஜடேஜா (14 ரன்கள்), பும்ரா (16 ரன்கள்) எடுத்ததன் மூலம் இந்திய அணி 250 ரன்களைக் கடந்தது. முடிவில் 48.5 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 266 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் தரப்பில் இந்திய அணியை பந்துவீச்சில் மிரட்டி சாஹீன் அப்ரிடி 4 விக்கெட்களையும், ஹாரீஸ் ராஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com