ஆசியக்கோப்பையில் அறிமுகமாகும் ஓமன்.. பலம், பலவீனம் என்ன?
எதிர்பார்ப்பை தூண்டியுள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் அறிமுக அணியாக களமிறங்குகிறது ஓமன். குட்டி அணி என்றாலும் கெத்து ஏதேனும் காட்டுமா என காத்திருக்கின்றனர் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள்.
2025 ஆசியக்கோப்பை தொடரானது டி20 வடிவத்தில் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை நடைபெறவிருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஹாங்ஹாங், ஓமன் முதலிய 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான் இருக்கும் கடினமான ஏ பிரிவில் இருக்கிறது ஓமன். ஐக்கிய அரபு அமீரகம் அடங்கிய இந்தப் பிரிவில் ஆச்சர்யத்தை நிகழ்த்துமான என்ற கேள்வியுடன்தான் இடம்பெற்றிருக்கிறது ஓமன் அணி. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஜதிந்தர் சிங் கேப்டனாகவும், விநாயக் சுக்லா துணைக் கேப்டனாகவும் இருக்கிறார்கள். மத்திய வரிசையில் பேட்டர் ஹம்மாத் மிர்சாவும், ஆஷிஷ் ஒடேடரா, ஆமிர் கலீம், முஹமது நதீம், சுப்யான் முகம்மத், கரன் சோனோவாலே ஆகிய ஆல்ரவுண்டர்களும் வலு சேர்க்கின்றனர் ஹஸ்னைன் அலி, ஃபைசல் ஷா, முஹமது இம்ரான், ஷகீல் அகமது, சமய் ஸ்ரீவத்வசா ஆகிய பந்துவீச்சாளர்களும் அந்த அணியில் உள்ளனர்.
சுப்யான் யூசுப், ஜிக்ரியா இஸ்லாம், ஃபைசல் ஷா, நதீம் கான் ஆகியோர் அறிமுக வீரர்களாக ஓமன் அணியில் இடம்பெற்றுள்ளனர். சமீபத்திய போட்டிகளை கருத்தில் கொண்டு கணிக்கும்போது, ஓமன் அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறுவது என்பது கடினம் என்றே தெரிகிறது. இருப்பினும், சர்வதேச இருபது ஓவர் போட்டிகளின் போக்கை பார்க்கும்போது எதிர்பாரா திருப்பங்கள் நேரிடவும் வாய்ப்புள்ளது. ஊதியப் பிரச்னை, அனுபவமின்மை, அதிக அழுத்தம் என சிறிய அணிக்கான சில பலவீனங்கள் ஓமன் அணிக்கு இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டி ஓமன் அணிக்கு சமபலம் வாய்ந்த ஆட்டமாக பார்க்கப்படுகிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது சாத்தியமற்றதாக தெரிந்தாலும், ஆசியக் கோப்பை தொடர் ஓமன் அணிக்கு சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும். இதையும் தாண்டி ஏதேனும் செய்தால் அது ஓமன் கிரிக்கெட்டில் புதிய வரலாறாக அமையும்.