“பாட் கம்மின்ஸ் மற்றும் ஜார்ஜ் பெய்லி இருவரும் என்னை ஏமாற்றிவிட்டனர்”- ஆஸி. அணி குறித்து அஸ்வின்!

ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டியில் எதற்காக முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்கள் என்பது குறித்து அஸ்வின் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
Ashwin
Ashwin Ashwin YT

நடந்து முடிந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சிறந்த கிரிக்கெட்டை விளையாடிய ஒரு அணி என்றால் அது இந்திய அணி மட்டும்தான். 9 லீக் போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய அணி, அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வென்ற பிறகு எப்படியும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றுவிடும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் இறுதிப்போட்டியில் இந்தியாவை ஆச்சரியப்படுத்திய ஆஸ்திரேலிய அணி, அன்றைய நாளில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை தட்டிச்சென்றது.

ஒரு பெரிய கனவோடு சென்ற இந்திய அணியின் கோப்பை கனவானது மைதானத்திலேயே சிதைந்துபோனது. ஒவ்வொரு இந்திய வீரர்களும் கண்ணீர் தளும்ப நின்ற காட்சிகள் இன்னும் மனதைவிட்டு நீங்காமல் இருக்கின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி எப்படி ஒரு தலைசிறந்த பகுப்பாய்வையும், அதை எப்படி களத்திலும் நிகழ்த்தி காட்டினார்கள் என்பது குறித்தும் அஸ்வின் பேசியுள்ளார்.

பாட் கம்மின்ஸ் மற்றும் ஜார்ஜ் பெய்லி இருவரும் என்னை ஏமாற்றிவிட்டனர்! - அஸ்வின்

ஆஸ்திரேலியா அணி மிகப்பெரிய போட்டிகளில் எல்லாம் எப்போதும் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்துவிடும். பின்னர் ஸ்கோர் போர்டு பிரஸ்ஸரை எதிரணி மீது போட்டு கோப்பையை தட்டிச்செல்லும்.

இந்திய அணிக்கு எதிரான 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியும் சரி, 2015 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியிலும் சரி... 300 ரன்களுக்கு மேல் குவித்துதான் ஆஸ்திரேலியா வெற்றிபெறும். அப்படியிருக்க டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Ashwin
Ashwin

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு முடிவு குறித்து ஆஸ்திரேலியா வீரர்களிடம் கேட்டபோது, அவர்கள் அளித்த பதில் குறித்து அஸ்வின் தன்னுடைய யு-டியூப் சேனலில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், ”ஆஸ்திரேலியா எதற்காக முதலில் பேட்டிங் செய்யாமல் இரண்டாவதாக பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்கள் என்ற குழப்பம் எனக்கு அதிகமாக இருந்தது. இதனால் போட்டியின் இடையே சென்று ஆஸ்திரேலியா கோச்சிங் ஸ்டாஃப் ஜார்ஜ் பெய்லியிடம் பேசினேன். நீங்க எப்போதும் முதலில் பேட்டிங்தானே எடுப்பீர்கள்.. எதனால் பவுலிங் தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்டேன். அதற்கு பெய்லி சொன்ன பதில் என்னை வாயடைக்க வைத்தது.

George Bailey
George Bailey

அதற்கு பதில் பேசிய பெய்லி, ”நாங்கள் இந்தியாவில் அதிகமாக ஐபிஎல் மற்றும் இருதரப்பு தொடர்களில் விளையாடியுள்ளோம். லக்னோ போன்ற மைதானங்களில் இருப்பது சிகப்பு மண், அது இரண்டாவது பேட்டிங் செய்யும்போது அதிகமாக திரும்பும்; பேட்டிங் ஆடுவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் அகமதாபாத் மைதானத்தில் இருப்பது கருப்பு மண், அது முதலில் பேட்டிங் செய்ய கடினமாகவும், அதிகமாக திரும்பக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் லைட் வெளிச்சம் வரும்போது அப்படியே சிமண்ட்டாலான தரைபோல் பேட்டிங் செய்ய இலகுவானதாக மாறிவிடும். இது எங்களுடைய அனுபவத்தில் நாங்கள் தெரிந்துகொண்டது” என்று கூறினார். அவருடைய பதிலை கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பாட் கம்மின்ஸ் மற்றும் ஜார்ஜ் பெய்லி இருவரும் என் எண்ணத்தை முழுமையாக ஏமாற்றிவிட்டனர்” என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com