INDvsWI | விண்டீஸை 150 ரன்களில் சுருட்டிய இந்தியா! 700* சர்வதேச விக்கெட்டுகளை கடந்து அஸ்வின் சாதனை!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 150 ரன்களுக்கு விண்டீஸை சுருட்டியது இந்தியா.
R Ashwin
R AshwinTwitter

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியானது டொமினிகாவில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

Ind vs Wi
Ind vs WiTwitter

டாஸ் வென்ற விண்டீஸ் கேப்டன் பிராத்வெயிட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். சொந்த மண்ணில் டாஸ்ஸை வெஸ்ட் இண்டீஸ் வென்ற நிலையில், இந்திய அணி என்ன செய்யப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பிராத்வெயிட் மற்றும் டேகனரின் சந்தர்பால் நல்ல தொடக்கத்தை அமைத்தனர். இரண்டு தொடக்க வீரர்களும் 80 பந்துகளை சந்தித்து நிதானமாக விளையாடிய நிலையில், விக்கெட்டை வீழ்த்த களத்தில் இறக்கப்பட்டார் இந்தியாவின் ப்ரைம் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின்.

3 ஓவர்களை மட்டுமே எடுத்துக்கொண்ட ரவிச்சந்திரன் அஸ்வின், சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினாலும் ஒரு அற்புதமான டெலிவரியால் டேகனரின் சந்தர்பாலை வெளியேற்றி அசத்தினார். அடுத்த ஓவரில் கேப்டன் பிராத்வெயிட் கேட்ச் கொடுத்து வெளியேற, அதற்கு பிறகு பந்துவீசிய ஜடேஜா அவருடைய பங்கிற்கு இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 76 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணி, மீண்டும் எழவே முடியாத அளவுக்கு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார் அஸ்வின். அந்தளவுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் அவர்.

கடைசிவரை போராடிய அறிமுக வீரர் ஆதன்சேவை அஸ்வின் வீழ்த்திய பிறகு, போட்டி இன்னும் எளிதானது. பிறகு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் இப்போட்டி மூலம், மீண்டும் ஒரு 5 விக்கெட்டுகளை (FIFER) கைப்பற்றி அசத்தினார்.

குறைவான போட்டிகளில் அதிக FIFER விக்கெட்டுகள்! ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்!

நேற்று தனது 93வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அஸ்வின், 33ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். இதன்மூலம் சாதனை பட்டியலில், தன் முன் இருந்த மாடர்ன் டே சிறந்த பவுலரான ஜேமி ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளியுள்ளார் அஸ்வின்.

R Ashwin
R Ashwin

குறிப்பிட்ட அந்தவரிசையில் முத்தையா முரளிதரன் 67 முறை (133 போட்டிகள்), ஷேன் வார்னே 37 முறை (145 போட்டிகள்), ரிச்சர்ட் ஹாட்லி 36 முறை (86 போட்டிகள்), அனில் கும்ப்ளே 35 முறை (132 போட்டிகள்), ரங்கனா ஹெராத் 33 முறை (93 போட்டிகள்) என தலைசிறந்த வீரர்களுடன் 6-வது இடத்தில் நீடிக்கிறார் அஸ்வின். இவருக்கு அடுத்த இடத்தில் 181 போட்டிகளில் 32 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜேமி ஆண்டர்சன் நீடிக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை எட்டிய 3-வது இந்திய வீரர்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்துவீசிய அஸ்வின், அல்சாரி ஜோசப்பின் விக்கெட்டை வீழ்த்திய போது சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 700-வது விக்கெட்டை கைப்பற்றினார். இதன்முலம் உலக அரங்கில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய 3-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் அஸ்வின். இப்பட்டியலில் கும்ப்ளே 953 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், ஹர்பஜன் 711 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றனர். 702 விக்கெட்டுகளை பதிவுசெய்திருக்கும் அஸ்வினுக்கு ஹர்பஜனை பின்னுக்கு தள்ள இன்னும் 9 விக்கெட்டுகளே தேவை உள்ளன.

மேலும் உலக வீரர்கள் பட்டியலில் 700 விக்கெட்டுகளை கடந்த 16வது வீரராக மாறினார் அஸ்வின். அந்த வரிசையில் முத்தையா முரளிதரன் (1347), ஷேன் வார்ன் (1001), ஜேம்ஸ் ஆண்டர்சன் (975), கும்ப்ளே (956), கிளென் மெக்ராத் (949), வாசிம் அக்ரம் (916), ஸ்டூவர்ட் பிராட் (841), ஷான் பொல்லாக் (829), வக்கார் யூனிஸ் (789), சமிந்தா வாஸ் (761), கர்ட்னி வால்ஷ் (746), பிரட் லீ (718), டிம் சவுத்தி (714), ஹர்பஜன் (711) மற்றும் டேனியல் வெட்டோரி (705) விக்கெட்டுகளுடன் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com