அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் என்ற இருபெரும் சுழல் ஜாம்பவான்களுக்கு இடையில் அதிகமான வாய்ப்பு கிடைக்காமல் போனவர் அமித் மிஸ்ரா.
2001-முதல் கிரிக்கெட் விளையாட தொடங்கிய அமித் மிஸ்ரா, 535 முதல் தர விக்கெட்டுகள், 252 லிஸ்ட் ஏ விக்கெட்டுகள், 285 டி20 விக்கெட்டுகள், 76 டெஸ்ட் விக்கெட்டுகள், 64 ஒருநாள் விக்கெட்டுகள், 16 சர்வதேச டி20 விக்கெட்டுகள் என மொத்தமாக 1228 விக்கெட்டுகளுடன் 42 வயதில் கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்திருக்கிறார்.
மொத்தமாக 68 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கும் மிஸ்ரா, பவுலிங் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் சில சிறந்த கேமியோக்களை கொடுத்துள்ளார்.
ஐபிஎல்லில் 174 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அமித் மிஸ்ரா, 3 ஹாட்-டிரிக் விக்கெட்டுகள் கைப்பற்றிய ஒரே பவுலர் ஆவார்.
அனில் கும்ப்ளேவிற்கு காயம் ஏற்பட்ட போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் பெற்ற அமித் மிஸ்ரா, அறிமுக போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதேபோல கடைசியாக நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒருநாள் போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக (18) விக்கெட்டுகள் வீழ்த்தியவர்
2 சர்வதேச டி20 போட்டிகள் அடுத்தடுத்து ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் பவுலர்
ஐபிஎல்லில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பவுலர்
ஐபிஎல்லில் ஸ்டம்பிங்கின் மூலம் அதிக (28) விக்கெட்டுகள் வைத்திருக்கும் பவுலர்
ஐபிஎல்லில் அதிகமுறைய ஆட்டநாயகன் (12) விருது வென்றவர்
ஒரு ஐபிஎல் சீசனில் 4 ஆட்டநாயகன் விருது வென்ற முதல் பவுலர்
2011-ல் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்தியா ஃபால்லொவ்-ஆனை துரத்தியது. அப்போது இரண்டாவது இன்னிங்ஸில் சச்சினுடன் சேர்ந்து 84 ரன்கள் அடித்தார் அமித் மிஸ்ரா, சச்சின் 91 ரன்கள் அடித்தார். முடிவில் இருவரின் போராட்டமும் வீணானது, இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
அதேபோல வங்கதேசத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 3ம் நிலை வீரராக களமிறங்கி 50 ரன்கள் அடித்து அசத்தினார். அந்தப்போட்டியில் இந்தியா அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.