“தயவுசெய்து ஓய்வு பெறாதீர்கள் கோலி..” - அம்பத்தி ராயுடு வைத்த உருக்கமான கோரிக்கை!
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த அணியுடன் 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தச் சூழலில் இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என உறுதிசெய்யப்பட்டது.
இந்த சூழலில் மூத்த வீரர் ரோகித் சர்மாவை தொடர்ந்து மற்றொரு மூத்த வீரரான விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவர் பிசிசிஐயிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அம்பத்தி ராயுடு வைத்த கோரிக்கை..
விராட் கோலி ஓய்வு குறித்த செய்திகள் வைரலான நிலையில், முன்னாள் இந்திய வீரரான அம்பத்தி ராயுடு முன் எப்போதும் விட தற்போதுதான் விராட் கோலி இந்திய அணிக்கு தேவை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய எக்ஸ்தள பக்கத்தில் பேசியிருக்கும் அம்பத்தி ராயுடு, “தயவுசெய்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறாதீர்கள் விராட் கோலி. முன் எப்போதையும் விட தற்போதுதான் இந்திய அணிக்கு நீங்கள் அதிகம் தேவை. உங்களிடம் இன்னும் நிறைய வலிமை இருக்கிறது. இந்திய அணியில் நீங்கள் இல்லை என்றால் டெஸ்ட் கிரிக்கெட் முன்பு இருந்ததுபோல் இருக்காது. தயவுசெய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்” என பதிவிட்டுள்ளார்.