ஆகாஷ் தீப்
ஆகாஷ் தீப்cricinfo

இந்தியாவை ஏமாற்ற நினைத்த இங்கிலாந்து.. வில்லனாக மாறிய ஆகாஷ் தீப்! இது உலகத்தரம்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் தீப், இந்தியாவிற்கு எதிராக கட்டமைத்த ஒட்டுமொத்த இங்கிலாந்தின் திட்டங்களையும் தவிடுபொடியாக்கினார்.
Published on

மோசமான திட்டத்துடன் வந்த இந்தியா..

விராட் கோலி, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிய 3 தலைசிறந்த வீரர்கள் இல்லாதபோதும், சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து ஒரு மோசமான திட்டத்துடனே களமிறங்கியது.

எப்போதும் ஸ்விங், பவுன்ஸ் என வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான பவுலிங் பிட்ச்சை உருவாக்கும் இங்கிலாந்து அணி, இந்தமுறை ’பாஸ்பால்’ அட்டாக்கிற்கு சாதகமாக தட்டையான ஆடுகளங்களையே உருவாக்கி இருந்தது.

இங்கிலாந்து - இந்தியா
இங்கிலாந்து - இந்தியா

சொந்த மண்ணில் இங்கிலாந்து ஏன் இப்படி ஒரு திட்டத்துடன் களத்திற்கு வரவேண்டும் என்ற கேள்வி? முதல் டெஸ்ட் போட்டியில் அனைத்து இங்கிலீஸ் பவுலர்களும் ஒரே லைன்-லெந்தில் வீசியபோது அதிகமாக எழுந்தது.

ஆனால் இந்தியா எவ்வளவு ரன்களை அடித்தாலும், அதை விரட்டிப்பிடிக்கும் வலுவான பேட்ஸ்மேன்களை கொண்டிருந்த இங்கிலாந்து, முதல் டெஸ்ட் போட்டியில் அவர்களுக்கான இந்த யுக்தியில் வெற்றியும் கண்டது.

மாறாக பும்ரா போன்ற ஒரு தலைசிறந்த பவுலரை தட்டையான ஆடுகளத்தில் அதிக ஓவர்களை வீசவைத்து, ஏற்கனவே உடல்தகுதி பிரச்னையால் இருந்தவரை 7 நாட்கள் ஓய்வுக்கு பிறகும் கட்டாய ஓய்வை அறிவிக்க வழிவகை செய்தது.

இங்கிலாந்து
இங்கிலாந்துcricinfo

இங்கிலாந்தின் இந்த திட்டங்கள் ‘கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா’ என்பது போல, இதுவரை இந்தியா வெற்றியே பெறாத ஒரு ஆடுகளம், அதில் பும்ராவும் அணியில் இல்லை என்ற மோசமான நிலைமைக்கு இந்தியாவை கொண்டுச்சென்றது.

எல்லாமே இங்கிலாந்துக்கு சாதகமாக மாற, இரண்டாவது டெஸ்ட்டிலும் வெற்றியை தான் பெறப் போகிறோம் என்ற அதீத மகிழ்ச்சியில் இருந்தது இங்கிலாந்து.

ஆனால் இங்கிலாந்தின் இந்த திட்டங்களை எல்லாம் தவிடுபொடியாக்கும் ஒரு வீரராக வந்து சேர்ந்தார் இந்தியாவின் ஆகாஷ் தீப்.

அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்..

முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட பயணப்பட்ட ஆகாஷ் தீப், முன்னும் பின்னும் திரும்பக்கூடிய பவுலிங் பிட்ச்சில் பந்துவீசப்போகிறோம் என்ற அதீத ஆர்வத்தில் தான் இங்கிலாந்து வந்துசேர்ந்தார். போதைக்குறைக்கு பும்ராவும் இங்கிலாந்தில் டியூக்ஸ் பந்துகள் எப்படி மூவ்-ஆகும் என்றெல்லாம் ஆகாஷ் தீப்பிற்கு எடுத்துச் சொல்ல, ’டியூக்ஸ் பந்தில் நாம் பவுலிங் போட்டதே இல்லையே’ என்ற ஆர்வமும் ஆகாஷ் தீப்பிற்கு தொற்றிக்கொண்டது.

இங்கிலாந்து மண்ணில் ஸ்விங்கில் மிரட்டப்போகிறோம் என்ற பயங்கர எதிர்ப்பார்ப்பில் இருந்த ஆகாஷ் தீப், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய பிறகும் ‘நான் ஏமாற்றப்பட்டேன்’ என்றே நேர்காணலில் தெரிவித்தார்.

ஏனென்றால் நன்றாக ஸ்விங் ஆகக்கூடிய ஆடுகளத்தில் பந்துவீசப்போகிறோம் என்ற ஆசையில் இருந்த ஆகாஷ் தீப்பிற்கு, இங்கிலாந்து நிர்வாகம் தட்டையான ஆடுகளத்தை கொடுத்து ஏமாற்றத்தையே கொடுத்தது. ஆனால் அந்த இடத்தில் தான் இங்கிலாந்து அணி ஆகாஷ் தீப்பிடம் தோற்றது.

ஆகாஷ் தீப்
ஆகாஷ் தீப்

ரஞ்சிக்கோப்பை போன்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் தட்டையான ஆடுகளத்தில் எப்படி விக்கெட் வீழ்த்தவேண்டுமென கரைத்துக்குடித்த ஆகாஷ் தீப், டெஸ்ட் கிரிக்கெட்டையே ஆண்டுவரும் ஜோ ரூட்டிற்கே தண்ணி காட்டினார். ஜோ ரூட்டுக்கு எதிராக சிறந்த டெஸ்ட் மேட்ச் டெலிவரி எது என்றால் ஆகாஷ் தீப்பின் விக்கெட்டைதான் காலம் நினைவில் கொள்ளப்போகிறது.

’அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்’ என்ற வசனத்திற்கேற்ப ஃபிளாட் பிட்ச்சை உருவாக்கிய இங்கிலாந்தின் திட்டத்தை, பிளாட் பிட்ச்சிலேயே பந்துவீசி ஊறிப்போன ஆகாஷ் தீப் இங்கிலீஸ் பேட்டர்களுக்கு எதிராக வித்தைக்காட்டினார். இங்கிலாந்து மண்ணில் அறிமுக டெஸ்ட்டிலேயே 10 விக்கெட்டை வீழ்த்திய ஆகாஷ் தீப் ஒரு மறக்க முடியாத வரலாற்று வெற்றிக்கு இந்தியாவை அழைத்துச்சென்றார்.

ஜோ ரூட்டுக்கு எதிராக கனவு பந்து..

இங்கிலாந்துக்கு எதிராக ஆகாஷ் தீப் வீழ்த்திய 10 விக்கெட்டுகளும் 10 முத்தை போன்று வந்துசேர்ந்தது. 140 வரை வீசக்கூடிய வேகம் இல்லையென்றாலும், தன்னுடைய லைன் மற்றும் லெந்தில் சிறப்பாக வீசிய ஆகாஷ் தீப் ஒவ்வொரு இங்கிலீஸ் பேட்ஸ்மேனையும் பதட்டத்திலேயே வைத்திருந்தார். ஜோ ரூட்டை எப்படி வீழ்த்தினார் என்பது ஒரு ஆர்ட் போல இருந்தது, ஒவ்வொரு வேகப்பந்துவீச்சாளருக்கும் அது கனவு பந்து போன்றது. உலக கிரிக்கெட்டையே டெஸ்ட்டில் ஆண்டுவரும் ஜோ ரூட்டை, அப்படி ஏமாற்றி வீழ்த்துவது தான் உலகத்தரம். அப்படியானால் முதல் டெஸ்ட்டிலேயே உலகத்தரத்தை எட்டிவிட்டார் ஆகாஷ் தீப்.

உள்ளூர் போட்டிகளில் ஆகாஷ் தீப்பின் பந்துவீச்சு சராசரி வெறும் 23 என்பதே, அவர் தட்டையான பிட்ச்சிலும் எப்படியான ஒரு பந்துவீச்சாளர் என்பதை பறைசாற்றுகிறது. பீகாரில் பிறந்த ஆகாஷ் தீப் முதல்தர கிரிக்கெட்டில் 138 விக்கெட்டுகளையும், சர்வதேச கிரிக்கெட்டில் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

கேன்சரால் பாதிக்கப்பட்ட ஆகாஷ்தீப் சகோதரி..

இங்கிலாந்து மண்ணில் விளையாடிய முதல் டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் தீப், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். இந்த சூழலில் 58 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா பெற்ற வெற்றியை கேன்சருக்கு எதிராக போராடிவரும் தன்னுடைய சகோதரிக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

புஜாரா உடனான நேர்காணலில் பேசிய ஆகாஷ் தீப், ”என்னுடைய சகோதரி கடந்த 2 மாதங்களாக கேன்சருடன் போராடிவருகிறார். அவர் என்னுடைய இந்த வெற்றியை பார்த்து மகிழ்ச்சியடைந்திருப்பார். அவருக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com