அகார்கர், வாட்சன் டெல்லி அணியிலிருந்து நீக்கம்?- ஆனாலும் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. இதுதான் காரணமா!

டெல்லி அணியின் துணை பயிற்சியாளர்களான வாட்சன் மற்றும் அகார்கர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்திய கிரிக்கெட் ஆடவர் அணியின் வீரர்கள் தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு அஜித் அகார்கர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஜித் அகார்கர்-ஷேன் வாட்சன்
அஜித் அகார்கர்-ஷேன் வாட்சன்Twitter

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதியில் கோர விபத்தில் சிக்கியதன் காரணமாக அவர் அணியில் இருந்து விலகியதால், டேவிட் வார்னர் தலைமையில் நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் அந்த அணி போட்டியை எதிர்கொண்டது. இதில் 14 லீக் போட்டிகளில் டெல்லி அணி 5-ல் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்தது. கடந்த 2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த டெல்லி அணி, பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது. இந்த வருடம் மோசமான தோல்வியை சந்தித்ததையடுத்து, வரும் 2024 ஆண்டு ஐபிஎல் தொடரில் வெற்றிபெறும் முனைப்பில், அந்த அணியின் பயிற்சியாளர்களில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ஐபிஎல் தொடரின் போதே தகவல்கள் வெளியாகின.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர், டெல்லி அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் தனது ட்விட்டர் பக்கத்தில், “அடுத்து வரும் ஐபிஎல் தொடர்களுக்கான முன்னேற்பாடுகள் டெல்லி அணியில் தற்போதே நடந்து வருகின்றன. சௌரவ் கங்குலி (டெல்லி அணியின் இயக்குநர்) மற்றும் ரிக்கி பாண்டிங் (தலைமை பயிற்சியாளர்) ஆகியோருடன் இணைந்து, கிரணும் நானும், நாங்கள் விரும்புகிற இடத்திற்கு அணியை திருப்பி கொண்டு வருவதற்கு கடினமாக உழைத்து வருகிறோம். அது மிக உயர்ந்த இடத்தில் உள்ளது என்பதை ரசிகர்களுக்கு உறுதியளிக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக இன்னும் ஒரு வருடங்கள் நீடிப்பார் என்று கூறப்படும் நிலையில், இன்று அந்த அணியின் ட்விட்டர் பக்கத்தில், துணைப் பயிற்சியாளர்களான அஜித் அகார்கர் (இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வலதுகை வேகப்பந்து வீச்சாளரும், ஆல் ரவுண்டரும்) மற்றும் ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்) ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளது. அந்த அணி ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, “உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி, அஜித் மற்றும் வாட்டோ. உங்களது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, பிசிசிஐ-யின் இந்திய கிரிக்கெட் ஆடவர் அணியின் வீரர்கள் தேர்வுக் குழுவின் தலைவர் பதவிக்கு அஜித் அகார்கர் தேர்ந்தெடுக்கப்படுவதை முன்னிட்டே அவர் நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் ஆடவர் அணியின் வீரர்கள் தேர்வுக்குழு தலைவராக செயல்பட்டு வந்த சேத்தன் சர்மா, வீரர்கள் தேர்வில் விமர்சனத்துக்குள்ளாகி வந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் இந்திய அணியின் வீரர்கள் பற்றியும், நிர்வாகம் பற்றியும் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து தாமாக முன்வந்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியை அவர் கடந்த பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார்.

சேத்தன் சர்மா வெளியேறியப் பிறகு அவருக்கு பதிலாக இடைக்கால தேர்வுக்குழு தலைவராக ஷிவ் சுந்தர் தாஸ் செயல்பட்டு வருகிறார். அடுத்த தேர்வுக்குழு தலைவரை பிசிசிஐ உறுதி செய்யாமல் இருந்த நிலையில், தேர்வுக்குழு தலைவர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. நாளையுடன் அதற்கான கெடு முடிவடைந்து, ஜூலை 1-ம் தேதி நேர்காணல் நடைபெறவுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் அஜித் அகார்கர் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், அடுத்த தேர்வுக்குக்குழு தலைவராக அவர் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் உள்ளதாலேயே, அவர் டெல்லி அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்றும் தகவல் பரவி வருகிறது. டெல்லி அணியிலிருந்து விடுவிக்கப்பட்டாரா அல்லது விடுவித்துக்கொண்டாரா என்று தெரியவில்லை.

BCCI
BCCI

இதேபோல், டெல்லி அணியின் மற்றொரு துணைப் பயிற்சியாளரான ஷேன் வாட்சன், வரும் ஜூலை 13 ஆம் தேதி துவங்கவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் (Major League Cricket), சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணியின் (San Francisco Unicorns) தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாலேயே அவரும் டெல்லி அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இருவருமே, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் டெல்லி அணியின் துணைப் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்திய அணியில் 3 வடிவ போட்டிகளிலும் பங்களிப்பு செய்துள்ள அஜித் அகார்கர், 26 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் அஜித் அகார்கர் இடம் பிடித்திருந்தார். இந்திய கிரிக்கெட் ஆடவர் அணியின் வீரர்கள் தேர்வில் பிசிசிஐ தற்போது தடுமாறி வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. அண்மையில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டி முதல் கொண்டு, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான வீரர்கள் தேர்வு வரை விமர்சனத்திற்குள்ளானது. அடுத்து அக்டோபரில் ஒருநாள் உலகக் கோப்பை வருவதால், ஒருவேளை தேர்வுக்குழு தலைவராக பதவியேற்கும் பட்சத்தில், வீரர்கள் தேர்வில் அஜித் அகார்கர் கடும் சவால்களை சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com