2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி | அகமதாபாத் நகரம் பரிந்துரை.. அமித் ஷா மகிழ்ச்சி!
2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்கு முன்மொழியப்பட்ட நகரமாக அகமதாபாத்தைப் பரிந்துரைப்பதாக காமன்வெல்த் விளையாட்டு வாரியம் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு உலகில் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படுவது ஒலிம்பிக் போட்டி. இதற்கு அடுத்த விழாவாகப் பார்க்கப்படுவது காமன்வெல்த் போட்டி. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டி, 2026ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த போட்டியில், 72 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 தடகள வீரர்கள் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். இந்த நிலையில், கனடாவின் ஹாமில்டனில் தொடக்க நிகழ்வு தொடங்கி 100 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு முன்மொழியப்பட்ட நகரமாக அகமதாபாத்தைப் பரிந்துரைப்பதாக காமன்வெல்த் விளையாட்டு வாரியம் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் இறுதி முடிவு, நவம்பர் 26 அன்று கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு பொதுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2030ஆம் ஆண்டுக்கான போட்டியை நடத்துவதற்கு நைஜீரிய நகரமான அபுஜாவுடன் இந்தியா போட்டியிட்டது, ஆனால் காமன்வெல்த் ஸ்போர்ட்ஸ், 2034ஆம் ஆண்டுக்கான பரிசீலனை உட்பட, எதிர்கால விளையாட்டுகளுக்கான ஆப்பிரிக்க நாட்டின் அபிலாஷைகளை ஆதரிப்பதற்கும் விரைவுபடுத்துவதற்கும் ஒரு உத்தியை உருவாக்க முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்து இந்தியாவை தேர்வு செய்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டு மதிப்பீட்டுக் குழுவால் மேற்பார்வையிடப்பட்ட ஒரு செயல்முறையைப் பின்பற்றி இந்தப் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, 2010இல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியையும் அது கருத்தில் கொண்டுள்ளது. இதன்மூலம், 2023ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நடத்திய உலகின் மிகப்பெரிய, 1,32,000 பேர் அமரக்கூடிய நரேந்திர மோடி மைதானத்தை அகமதாபாத் பெருமைப்படுத்த முடியும். இந்த நகரத்தின் மக்கள் தொகை ஐந்து மில்லியனுக்கும் அதிகமாகும், மேலும் எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான சாத்தியமான ஏலதாரராகவும் இது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த மைதானத்தில், காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டது., மேலும் நகரத்தின் விளையாட்டு உள்கட்டமைப்பு முக்கிய பல விளையாட்டு போட்டிகளை வெற்றிகரமாக நடத்த மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக காமன்வெல்த் விளையாட்டு தலைமை நிர்வாக அதிகாரி கேட்டி சாட்லீர், “2030 ஆம் ஆண்டு நூற்றாண்டு விழாப் போட்டிகள் 100 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டாடுவதற்கு மட்டுமல்லாமல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் எவ்வாறு தொடர்ந்து வளர்ச்சியடைய முடியும் என்பதை நிரூபிக்கவும், காமன்வெல்த் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளுக்கு அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பரிந்துரையை வரவேற்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவிற்கு மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பெருமை தரும் தருணம் எனப் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர், “உலக விளையாட்டு வரைபடத்தில் இந்தியாவை இடம்பெறச் செய்ய பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகளுக்கு இது ஒரு மகத்தான அங்கீகாரமாகும். உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும், நாடு தழுவிய அளவில் விளையாட்டுத் திறமையாளர்களை உருவாக்குவதும், மோடி ஜி இந்தியாவை ஒரு அற்புதமான விளையாட்டுத் தலமாக மாற்றியுள்ளார்” என அதில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் இந்தப் பரிந்துரையை வரவேற்றுள்ளார். அவர், ”குஜராத்துக்கும் இந்தியாவுக்கும் ஒரு பெருமையான தருணம். 2030ஆம் ஆண்டு நூற்றாண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த அகமதாபாத் நகரத்தை காமன்வெல்த் விளையாட்டு நிர்வாக வாரியம் பரிந்துரைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல், அகமதாபாத்தை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக மாற்றும் எங்கள் தொலைநோக்குப் பார்வையை முன்னேற்றுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமைக்கும், இந்தியாவின் உலகளாவிய விளையாட்டுச் சிறப்பிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.