3 வீரர்கள் சதம்.. 19 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி தரமான சம்பவம்!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்டு 4 வரை 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி நேற்று இங்கிலாந்து லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வுசெய்ய இந்திய அணி பேட்டிங் செய்துவருகிறது.
19 ஆண்டுக்கு பிறகு 3 இந்திய வீரர்கள் சதம்..
பரபரப்பாக தொடங்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு நல்ல தொடக்கம் கொடுத்தனர். ராகுல் 42 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேற, அடுத்துவந்த சாய் சுதர்சன் அறிமுக போட்டியில் 0 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அதற்குபிறகு நடந்ததெல்லாம் காலத்திற்குமான சம்பவம்.
3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து சதங்களை பதிவுசெய்து அசத்தினர்.
ஜெய்ஸ்வால் 101 ரன்னுக்கும், சுப்மன் கில் 147 ரன்னுக்கும் அவுட்டாகி வெளியேற, 5வது வீரராக களத்திற்கு வந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 12 பவுண்டரிகள் 6 சிக்சர்களை பறக்கவிட்டு சதமடித்து அசத்தினார்.
இப்படி வெளிநாட்டு மண்ணில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 3 இந்திய வீரர்கள் சதமடிப்பது 19 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறை. அதுமட்டுமில்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் இப்படி 3 இந்திய வீரர்கள் ஒரே இன்னிங்ஸில் சதமடிப்பது இது 4வது முறையாகும்.
வெளிநாட்டு மண்ணில் ஒரே இன்னிங்ஸில் 3 இந்திய வீரர்கள் சதம்:
* 1986 Vs ஆஸ்திரேலியா - கவாஸ்கர், ஸ்ரீகாந்த் & மொஹிந்தர் - சிட்னி மைதானம்
* 2002 Vs இங்கிலாந்து - டிராவிட், டெண்டுல்கர் & கங்குலி -ஹெடிங்லி
* 2006 Vs வெஸ்ட் இண்டீஸ் - சேவாக், டிராவிட் & கைஃப் - கிராஸ் ஐலெட்
* 2025 Vs இங்கிலாந்து - ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் - ஹெடிங்லி