முடிவுக்கு வந்தது ஆப்கானிஸ்தான் போராட்டம்! அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது!

நடப்பு உலகக்கோப்பை தொடரில் 4 வெற்றிகளுடன் 5வது அணியாக வெளியேறியது ஆப்கானிஸ்தான் அணி.
ஆப்கானிஸ்தான் அணி
ஆப்கானிஸ்தான் அணிICC

2023 உலகக்கோப்பை தொடரில் முதலிரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்தாலும், நடப்பு உலக சாம்பியன் அணியான இங்கிலாந்தை வீழ்த்தி தொடங்கிய ஆப்கானிஸ்தானின் வெற்றிப்பயணம், அடுத்தடுத்து உலக சாம்பியன்களான பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி உச்சத்தில் சென்று நின்றது. உடன் நெதர்லாந்தையும் தோற்கடித்த ஆப்கானிஸ்தான், 7 போட்டிகளில் 4-ல் வெற்றிபெற்று அரையிறுதி செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியது.

செமிபைனல் செல்வதற்கான முக்கியமான போட்டியில் 5 முறை உலகக்கோப்பை வென்ற ஜாம்பவான் அணியான ஆஸ்திரேலியாவை நிலைகுலைய வைத்த ஆப்கானிஸ்தான் அணி, கிட்டத்தட்ட போட்டியை வென்றேவிட்டது என்று தான் சொல்லவேண்டும். ஆனால் இறுதியாக ஒரு நம்பமுடியாத மேஜிக்கல் இன்னிங்ஸ் ஆடிய மேக்ஸ்வெல், ஆப்கானிஸ்தானின் செமிபைனல் வாய்ப்பை தனியொரு ஆளாக தட்டிப்பறித்தார்.

97 ரன்னில் சதத்தை தவறவிட்ட அஸ்மதுல்லா!

ஒரு கடினமான கடைசி லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது ஆப்கானிஸ்தான் அணி. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, உலகத்தரம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. யார் பந்துவீசினாலும் ஓவருக்கு ஒரு பவுண்டரி என விரட்டிய குர்பாஸ் மற்றும் ஜத்ரான் ஜோடி, 8 ஓவர்கள் வரை விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் 41 ரன்களை சேர்த்தது. ஆனால் இதற்கு மேல் வேகப்பந்துவீச்சாளர்களை நம்பி பிரயோஜனம் இல்லை என, சுழற்பந்துவீச்சாளர் மஹாராஜின் கையில் பந்தை கொடுத்தார் கேப்டன் பவுமா. 9வது ஓவரை வீசவந்த மஹாராஜ், 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி 25 ரன்னில் இருந்த குர்பாஸை வெளியேற்றி கலக்கிப்போட்டார். உடன் அடுத்த ஓவரில் ஜத்ரானை 15 ரன்னில் வெளியேற்றி அசத்தினார் ஜெரால்ட் கோட்ஸி.

ஜெரால்ட் கோட்ஸி
ஜெரால்ட் கோட்ஸி

41 ரன்களுக்கே 2 விக்கெட்டை இழந்து ஆப்கானிஸ்தான் தடுமாற, மீண்டும் பந்துவீச வந்த மஹாராஜ் சிறப்பான ஃபார்மில் இருக்கும் கேப்டன் ஷாஹிதியை 2 ரன்னில் வெளியேற்றி, ஆப்கானிஸ்தான் அணிக்கு அடிக்கு மேல் அடி கொடுத்தார். பின்னர் பந்துவீச்சில் ஒரு சூறாவளியையே கிளப்பிய ஜெரால்ட் கோட்ஸி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்த ஆட்டம் கண்டது ஆப்கானிஸ்தான் அணி.

அஸ்மதுல்லா
அஸ்மதுல்லா

என்ன தான் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்ற அஸ்மதுல்லா ஓமர்சாய் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை எடுத்துவந்தார். தனியொரு ஆளாக 7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டிய அஸ்மதுல்லா 90 ரன்களை கடந்து சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிய, 97 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்த அஸ்மதுல்லா சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 50 ஓவர் முடிவில் 244 ரன்களை எடுத்தது ஆப்கானிஸ்தான் அணி.

டஸ்ஸென் உதவியால் தென்னாப்பிரிக்கா வெற்றி!

245 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களம்கண்ட தென்னாப்பிரிக்கா அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய டிகாக் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு அதிரடி காட்டினார். உடன் கேப்டன் பவுமாவும் 3 பவுண்டரிகளை விரட்ட 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை கடந்தது தென்னாப்பிரிக்கா அணி. ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணற, பின்னர் பந்துவீச வந்த சுழற்பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து பவுமா மற்றும் டிகாக்கை வெளியேற்றி கலக்கி போட்டனர்.

van dar dussen
van dar dussen

ஆனால் என்ன தான் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் பின்னர் வந்த டஸ்ஸென் மற்றும் மார்க்ரம் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடியை மார்க்ரமை வெளியேற்றி பிரித்து வைத்தார் ரசீத் கான். அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும், ஒருபுறம் நிலைத்து நின்ற வான் டர் டஸ்ஸென் 6 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி 76 ரன்கள் அடிக்க, இறுதியாக களத்திற்கு வந்த ஆண்டிலே அடுத்தடுத்து 3 சிக்சர்களை பறக்கவிட்டு கெத்துக்காட்டினார். இறுதிவரை நிலைத்து நின்ற இந்த ஜோடி தென்னாப்பிரிக்கா அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றது. முடிவில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி, அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்து தொடரை விட்டே வெளியேறியது.

முடிவுக்கு வந்த அரையிறுதி போராட்டம்!

இந்த தொடர் முழுவதும் சிறப்பான கிரிக்கெட் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, 2025-ல் நடக்கவிருக்கும் சாம்பியன் டிரோபி தொடருக்கு நேராக தகுதிபெற்றுள்ளது. மேலும் இந்த தொடர் முழுக்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் 5 பேர் 300 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

அதிகமாக 25 வயதுக்குள் மட்டுமே இருக்கும் இளம்வீரர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் அணி, இதே பலத்தோடு சாம்பியன்ஸ் டிரோபியில் பங்கேற்று அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்பதே அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. சிறந்த கிரிக்கெட் அணியாக மென்மேலும் வளர ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com