வரலாறு படைக்குமா ஆப்கான் அணி? 7 விக்கெட்டுகள் இழந்து பரிதாப நிலையில் ஆஸி. ! இதுதான் பழைய ரெக்கார்ட்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 292 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
Aus vs Afg
Aus vs AfgICC

நடப்பு உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற உலக சாம்பியன்களை வீழ்த்தி 4 வெற்றிகளுடன் அரையிறுதிக்கான ரேஸ்ஸில் வலுவான அணியாக போட்டியிட்டு வருகிறது. பெரிய அணிகள் எல்லாம் சொதப்பி வரும் நிலையில், இந்த உலகக்கோப்பையை தங்களது முதல் குறிக்கோளாக வைத்து களமிறங்கியுள்ள ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது.

ஆப்கானிஸ்தானுக்காக முதல் உலகக்கோப்பை சதமடித்தார் இப்ராஹிம்!

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. நல்ல தொடக்கத்தை ஆரம்பித்த குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரான் கூட்டணியை 38 ரன்னில் பிரித்த ஆஸ்திரேலியா அணி முதல் விக்கெட்டை எடுத்துவந்தது. ஆனால் 2வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த இப்ராஹிம் மற்றும் ரஹ்மத் ஷா இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபுறம் இப்ராஹிம் நிலைத்து நின்று விளையாட, மறுமுனையில் சிறப்பான ஃபார்மில் இருக்கும் ரஹ்மத் ஷா பொறுப்பாக விளையாடினார். ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு டஃப் கொடுத்த இந்த ஜோடி, ஆப்கானிஸ்தானை 100 ரன்களை கடந்து எடுத்துச்சென்றது. 2வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த இந்த கூட்டணியை ரஹ்மத்தை 30 ரன்னில் வெளியேற்றி பிரித்துவைத்தார் மேக்ஸ்வெல்.

Ibrahim Zadran
Ibrahim Zadran

என்னதான் நல்ல பார்ட்னர்ஷிப் உடைந்தாலும் அதற்கு பிறகு கைக்கோர்த்த இப்ராஹிம் மற்றும் கேப்டன் ஷாஹிதி ஜோடியும் சிறப்பாகவே செயல்பட்டது. ஆஸ்திரேலியா சுமாராக பந்துவீசியதா இல்லை ஆப்கானிஸ்தான் சிறப்பாக பேட்டிங் செய்கிறதா என்ற குழப்பமே இல்லாமல், மோசமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு அடிகொடுத்துகொண்டிருந்தனர் ஆப்கானிஸ்தான் பேட்டர்கள். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய இப்ராஹிம் அரைசதம் அடித்து அசத்த, ரன்களை எடுத்துவர முயன்ற கேப்டன் ஷாஹிதி அதிரடிக்கு சென்று விக்கெட்டை பறிகொடுத்தார். நடுவில் ரன்கள் வருவதில் சிக்கல் ஏற்பட களத்திற்கு சரியான நேரத்தில் வந்த ஓமர்சாய், சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி ரன்களை எடுத்துவந்தார். 2 சிக்சர்களை பறக்கவிட்ட ஓமர்சாயை அதிக நேரம் நிலைக்கவிடாத ஷாம்பா 22 ரன்னில் வெளியேற்றினார். உடன் களத்திற்கு வந்த முகமது நபியின் ஒரு சிக்சர் அடித்து வெளியேற, கடைசி 10 ஓவருக்கு ஆப்கானிஸ்தான் என்ன செய்யப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமானது.

Rashid Khan
Rashid Khan

என்னதான் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்துகொண்டே இருந்தாலும் நிதானமாக ஆடிய தொடக்கவீரர் இப்ராஹிம் ஜத்ரான், 7 பவுண்டரிகளை விரட்டி ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் உலகக்கோப்பை சதத்தை எடுத்துவந்து அசத்தினார். சரியான நேரத்தில் இப்ராஹிம் சதம் விளாச, இறுதியாக கூட்டணி சேர்ந்த ரசீத் கான் மற்றும் இப்ராஹிம் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இப்ராஹிம் அடுத்தடுத்து 3 சிக்சர்களை பறக்கவிட, மறுமுனையில் ருத்ரதாண்டவம் ஆடிய ரசீத் கான் 2 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டினார். இறுதிவரை அவுட்டாகாமல் நிலைத்து நின்ற இப்ராஹிம் 129* ரன்கள் அடிக்க 291 ரன்கள் என்ற நல்ல டோட்டலை எட்டியது ஆப்கானிஸ்தான் அணி.

87 ரன்னுக்கு 6விக்கெட்டை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா!

292 ரன்கள் என்ற நல்ல இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கவீரர் டிராவிஸ் ஹெட்டை டக் அவுட்டில் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார் நவீன் உல் ஹக். உடன் அதே ஓவரில் கைக்கு வந்த வார்னரின் கேட்சை தவறவிட்டார் ரஹ்மத் ஷா. இரண்டு பக்கமும் பந்துவீசிய நவீன் மற்றும் அஸ்மதுல்லா இருவரும் சிறப்பான ஸ்விங்கிங்கை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா வீரர்களுக்கு அழுத்தம் கூட்டினார். ஆனால் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் என பறக்கவிட்ட மிட்செல் மார்ஸ் அழுத்தத்தை ஆப்கானிஸ்தான் பக்கம் திருப்பினார். ஆனால் மீண்டும் பந்த வீச வந்த நவீன் உல் ஹக் மிட்செல் மார்ஸ் விக்கெட்டை எடுத்துவந்து மீண்டும் ஆஸ்திரேலியா மீது அழுத்தம் போட்டார்.

மறுமுனையில் இந்த பக்கம், அந்த பக்கம் என பந்தை திருப்பிய அஸ்மதுல்லா மெய்டன் ஓவர் போட்டு கலக்கிப்போட, அழுத்தம் அதிகமான நிலையில் கவனம் இழந்த டேவிட் வார்னர் போல்டாகி வெளியேறினார். உடன் அடுத்து களத்திற்கு வந்த ஜோஸ் இங்க்லீஸை கோல்டன் டக்கில் வெளியேற்றிய அஸ்மதுல்லா, அடுத்தடுத்து 2 பந்துகளில் 2 விக்கெட்டை எடுத்துவந்து ஆஸ்திரேலியாவை தலைகீழாக திருப்பி போட்டார். 49 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா அணி.

சற்று நேரம் தாக்குப்பிடித்தது லபுசன - மேக்ஸ்வெல் ஜோடி. ஆனால், ரஷித் கான் ஓவரில் மேக்ஸ்வெல்லின் அவசர அழைப்பால் லபுசன ரன் அவுட் ஆகி வெளியேறினார். அத்துடன் ரஷித் கானின் அசத்தலான பந்துவீச்சில் ஸ்டொய்னிஸ் விக்கெட்டை பறிகொடுத்தார். அத்துடன், ஸ்டார்க்கையும் வந்த வேகத்தில் வெளியேற்றினார் ரஷித். ஆனால் அந்த பந்து பேட்டில் படவில்லை, ஸ்டார்க் ரிவிவ்யூ கேட்கவில்லை. ஆஸ்திரேலிய அணி 91 ரன்னில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

உலகக்கோப்பையில் ஆஸியின் அதிகபட்ச ரன்சேஸ் 287!

உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை ஆஸ்திரேலியா அணி அதிகபட்சமாக சேஸ் செய்த ரன்கள் என்றால் அது 287 ரன்கள் மட்டுமே. 1996 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக இந்த ரன்களை சேஸ் செய்திருந்த ஆஸ்திரேலியா அணி, இதற்கு மேலான ரன்களை சேஸ் செய்ததே இல்லை.

Head
Head

இந்நிலையில் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிற்கு 292 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஒருவேளை இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் பட்சத்தில், 5 முறை உலக கோப்பை வென்ற சாம்பியன் அணியை வீழ்த்தி வரலாறு படைக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com