
நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 6 ஆவது ஆட்டம் பிரிவு பி-ல் இடம்பெற்றிருந்த இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 291 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக குசால் மெண்டீஸ் 92 ரன்களையும், பதும் நிசன்கா 41 ரன்களையும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் குல்பதின் 4 விக்கெட்களையும் ரஷித்கான் 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் 291 ரன்கள் என்ற இலக்கை 37.1 ஓவர்களில் எட்ட வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது (இதை செய்தால் ரன் ரேட் அடிப்படையில் அந்த அணி செல்லும்). ஆனால், 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 289 ரன்களை மட்டுமே எடுத்தது. 37.1 ஓவர்களுக்கு பின்பும் அந்த அணிக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அடுத்த 3 பந்துகளில் ஒரு சிக்ஸ் அடித்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது.
ஆனால் 3 பந்துகளில் 2 டாட் ஆன நிலையில் 3 ஆவது பந்தில் தனது கடைசி விக்கெட்டையும் இழந்தது ஆப்கானிஸ்தான் அணி. 2 ரன்கள் வித்தியாசத்திலும் அந்த அணி தோற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக முஹம்மது நபி 65 ரன்களையும் கேப்டன் ஹஸ்மதுல்லா 59 ரன்களையும் எடுத்திருந்தனர். சிறப்பாக பந்து வீசிய இலங்கை அணியில் ரஜிதா 4 விக்கெட்களையும் துனித், தனஜ்செயா டி சில்வா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிவேக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் முஹம்மது நபி முதல் இடம் பிடித்தார். இவர் நேற்று நடந்த போட்டியில் 24 பந்துகளில் 50 ரன்களை அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். அதேபோல் ஆசியக் கோப்பைகளில் ஒரு இன்னிங்ஸின் இரண்டாவது அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்டாக முஹம்மது நபியின் ஸ்ட்ரைக் ரேட் அமைந்தது. 32 பந்துகளில் 65 ரன்களை எடுத்த அவர் 203.12 எனுக் ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். முதலிடத்தில் ஷாகித் அஃப்ரிடி உள்ளார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் உடனான போட்டியில் 60 பந்துகளில் 124 ரன்களை எடுத்து 206.66 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியதே சாதனையாக உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் தங்களின் தோல்வி குறித்து கூறுகையில், “மிகுந்த ஏமாற்றம் அளிக்கக்கூடிய ஒன்று. கடந்த 2 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறோம் என நினைக்கின்றேன். தொடர்ந்து கற்றுக்கொண்டுள்ளோம். உலகக்கோப்பை நெருங்குவதால், செய்த தவறுகளை திருத்திக்கொண்டு உலகக்கோப்பைக்கு இன்னும் சிறப்பாக தயாராவோம்” என்றார்.