”3 மாதத்திற்கு முன்தான் தாயை இழந்தேன்..”- 4வது வெற்றிக்கு பிறகு எமோசனலாக பேசிய கேப்டன் ஷாஹிதி!

நெதர்லாந்து அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானை புள்ளிப்பட்டியலில் கீழே தள்ளியது.
Shahidi
ShahidiCricinfo

நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு பிறகு சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு ஆசிய அணி என்றால் அது ஆப்கானிஸ்தான் மட்டும்தான். இந்த உலகக்கோப்பைக்கு முன்புவரை ஒரேயொரு உலகக்கோப்பை போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த ஆப்கானிஸ்தான் அணி, தற்போது 7 போட்டிகளில் 4-ல் வெற்றியை பதிவுசெய்து மிரட்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் பதட்டமில்லாமல் செயல்படும் ஆப்கானிஸ்தான் அணி, சமீப காலத்தில் அதிக முன்னேற்றம் கண்ட அணியாக மிளிர்ந்துவருகிறது.

Shahidi
வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்! "2025 Champions Trophy"-க்கு தகுதிபெற்று சாதனை! மோசமான England-ன் நிலை?

நடப்பு உலகக்கோப்பையின் அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கும் ஒரு போட்டியில் நேற்று நெதர்லாந்தை எதிர்த்து விளையாடியது ஆப்கானிஸ்தான் அணி. டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் பேட்டிங்கை தேர்வுசெய்தார்.

4 வீரர்கள் ரன் அவுட்டில் வெளியேறினர்!

பந்துவீச்சுக்கு சாதகமான லக்னோ ஆடுகளத்தில் முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை எடுத்துவந்தார் முஜீப் ரஹ்மான். விரைவாகவே விக்கெட்டை இழந்தாலும், 2வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த மேக்ஸ் மற்றும் அக்கெர்மன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எதிர்கொண்ட ஓவர்களில் எல்லாம் பவுண்டரிகளாக விரட்டிய இந்த ஜோடி, ஆப்கானிஸ்தான் பவுலர்களுக்கு தண்ணி காட்டியது. 73 ரன்களுக்கு 1 விக்கெட் என எல்லாமே நன்றாகதான் சென்று கொண்டிருந்தது. ஆனால் அதற்கு பிறகு ஒரு மறக்கமுடியாத ஆட்டத்தை ஆடியது நெதர்லாந்து அணி.

afg vs ned
afg vs ned

“நீங்களாம் விக்கெட் எடுக்க வேண்டாம், நாங்களே ஃபிரியா தர்ரோம்” என தொடர்ச்சியாக 4 ரன் அவுட்களில் வெளியேறிய நெதர்லாந்து வீரர்கள், ”என்னப்பா இது ஒருவேள ரீப்ளே பார்க்குறோமா” என ஒருகணம் தலைசுற்ற வைத்தனர். 73 ரன்னுக்கு 1 விக்கெட் என இருந்த நெதர்லாந்து, அடுத்தடுத்து 4 ரன் அவுட்களில் 97 ரன்னுக்கு 5 விக்கெட்டுகள் என மாறியது. ஒரு உலகக்கோப்பை போட்டிகளில் டாப் 5 வீரர்களில் 4 வீரர்கள் ரன் அவுட்டில் வெளியேறுவது இதுவே முதல்முறையாகும்.

afg vs ned
afg vs ned

நெதர்லாந்து அணி தாங்களாகவே தங்கள் தலையில் மண்ணை வாரி போட, சரியான நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட முகமது நபி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்துவந்தார். உடன் நூர் அஹமதும் விக்கெட் வேட்டையாட, அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த நெதர்லாந்து அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்தது.

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

180 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். என்னதான் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தாலும், 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ரஹ்மத் ஷா மற்றும் கேப்டன் ஷாஹிதி இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆப்கானிஸ்தான் அணி
ஆப்கானிஸ்தான் அணி

அடுத்த விக்கெட்டை விழாமல் பார்த்துக்கொண்ட இந்த ஜோடி, தேவையான நேரத்தில் பவுண்டரிகளை பறக்கவிட்டு ரன்களை எடுத்துவந்தது. நடப்பு உலகக்கோப்பை தொடர் முழுக்க சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த கூட்டணி, இந்த போட்டியையும் வெற்றிக்கு அழைத்து சென்றது. ரஹ்மத் ஷா மற்றும் கேப்டன் ஷாஹிதி இருவரும் அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்து அசத்த, 180 ரன்கள் என்ற வெற்றி இலக்கை 32வது ஓவரிலேயே எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றிபெற்றது ஆப்கானிஸ்தான் அணி.

ரஹ்மத் ஷா
ரஹ்மத் ஷா

இந்த போட்டியில் வெற்றிபெற்றதை அடுத்து நடப்பு உலகக்கோப்பையில் 4வது வெற்றியை பதிவுசெய்து அசத்தியுள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலிருந்த பாகிஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளி, 5வது இடத்தை சீல் செய்துள்ளது ஆப்கானிஸ்தான். மீதமிருக்கும் 2 போட்டிகளில் வெற்றிபெற்றாலோ அல்லது டாப் 4-ல் இருக்கும் அணிகள் ஓரிரு போட்டியில் தோல்வியை தழுவினாலோ ஆப்கானிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக அமையும்.

3 மாதங்களுக்கு முன்தான் தாயை இழந்தேன்! - ஷாஹிதி

போட்டி முடிந்த பிறகு எமோசனலாக பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாஹிதி, “உலகக்கோப்பையில் 4 வெற்றிகளை பெறுவது எங்களுக்கு பெரிய சாதனையாகும். இதோடு நிறுத்தாமல் அரையிறுதிக்கு முன்னேற 100 சதவீதம் எங்களுடைய முழு உழைப்பையும், திறனையும் வெளிப்படுத்துவோம். கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் என் தாயை நான் இழந்தேன். என் குடும்பம் மிகுந்த வலியோடு இருக்கிறது. அதனுடன் எங்கள் மக்களும் பல்வேறு இன்னல்களில் சிக்கி அதிக வலியுடன் இருக்கிறார்கள். இந்த வெற்றியானது எனக்கு மட்டுமல்லாமல் என் நாட்டு மக்களுக்கும் தேவையான ஒன்றாகும்.

ஷாஹிதி
ஷாஹிதி

ஒன்றை மட்டும் என் நாட்டு மக்களிடம் சொல்ல விரும்புகிறேன். நிறைய இன்னல்களுக்கிடையில் அதிகப்படியான மக்கள் அனைத்தையும் இழந்து வருகின்றனர். நாங்கள் அனைவரது வலியையும் பார்த்து வருகிறோம். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம். இந்த வெற்றி உங்களுக்கானது. உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன்” என கூறிவிட்டு நகர்ந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com