முதல் சர்வதேச டி20 சதத்தை பதிவுசெய்த ஆப்கானிஸ்தான் வீரர்! 203 ரன்கள் குவித்து அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆப்கானிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்களை (278 ரன்கள்) பதிவுசெய்திருக்கும் அணி என்ற பெருமையோடு ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்றது.
7 பவுண்டரிகள் 7 சிக்சருடன் சதமடித்த குர்பாஸ்!
டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ஹஸ்ரதுல்லா ஷசாய், ரஹ்மனுல்லா குர்பாஸ் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிக்சர் பவுண்டரி என அதிரடியை தொடங்கிய ஷசாய் 31 ரன்கள் அடித்திருந்த போது விரைவாகவே வெளியேறினார். பின்னர் கைக்கோர்த்த குர்பாஸ் மற்றும் கேப்டன் இப்ராஹிம் ஜத்ரான் இருவரும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஒருபக்கம் ஜத்ரான் பவுண்டரிகளாக விரட்ட, மறுமுனையில் அடுத்தடுத்து சிக்சர்களாக பறக்கவிட்ட ஜத்ரான் வானவேடிக்கை காட்டினார். 7 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் என துவம்சம் செய்த குர்பாஸ், 52 பந்துகளில் சதமடித்து அசத்தினார். மறுமுனையில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என விளாசிய ஜத்ரான் 59 ரன்கள் அடிக்க 203 ரன்களை குவித்தது ஆப்கானிஸ்தான் அணி.
204 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய யுஏஇ அணி, ஃபரூக் மற்றும் நவீன் உல் ஹக் இருவருடைய அசத்தலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவாகவே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து டைட்டாக பந்துவீசிய ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்கள் 20 ஓவர் முடிவில் 131 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தனர். முடிவில் யுஏஜி அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்காக 6 சர்வதேச சதங்கள்!
ஆப்கானிஸ்தான் அணிக்காக ஷசாத் 7 சர்வதேச சதங்களை அடித்து முதலிடத்தில் இருக்கும் நிலையில், தற்போது யுஏஇ அணிக்கு எதிராக டி20 சதத்தை பதிவுசெய்த குர்பாஸ் 6 சதங்களை பதிவுசெய்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். சிறந்த ஃபார்மில் இருக்கும் ரஹ்மனுல்லா குர்பாஸ் விரைவில் ஷசாத் சாதனையை முறியடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.