“இத்தனை ஆண்டு இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமிதம் தரவில்லையா?”-சேவாக்கிற்கு விஷ்ணு விஷால் கேள்வி

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் இந்தியாவிற்கு பதிலாக பாரத் எனும் பெயரை பயன்படுத்த வேண்டும் என்ற கருத்திற்கு திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
virender sehwag - vishnu vishal
virender sehwag - vishnu vishalweb

பாஜகவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு INDIA என பெயர் வைத்ததில் இருந்தே ஆளும் தரப்பினர் ‘பாரத்’ என்ற வார்த்தையை அதிகமாக உபயோகித்து வருகின்றனர். அதை மேலும் உறுதி செய்யும் வகையில், இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கான அழைப்பிதழில் கூட இந்தியாவிற்கு பதில் “பாரத்” என குறிப்பிட்டு வரவேற்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தற்போது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியதோடு பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

அதே போல “பாரத் குடியரசு” என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ட்விட்டரில் பதிவிட்டது முதல், தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி பாரதம் எனக்குறிப்பிட்டது வரை அனைத்து அரசியல் கருத்து பரிமாற்றம் என்பதையெல்லாம் தாண்டி தற்போது விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள் என இந்த பெயர் மாற்றத்திற்கான சர்ச்சை என்பது நீண்டுகொண்டே சென்றுவருகிறது.

இந்திய ஜெர்சியில் பாரத் என பதியப்பட வேண்டும் - சேவாக்

பாரத் எனும் பெயர் மாற்றம் குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக், “ஒரு பெயரானது நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர். நம்முடைய அசல் பெயர் என்பது பாரத் என்பதாகவும்.

நான் இந்த உலகக்கோப்பையில் ஒன்றை வலியுறுத்துகிறேன். நமது வீரர்கள் அவர்களுடைய ஜெர்சியில் நெஞ்சில் பாரத் என்ற பெயரை பெற்றிருக்க வேண்டும்” என பிசிசிஐ மற்றும் ஜெய்ஷா இருவரையும் டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் “டீம் இந்தியா இல்லை டீம் பாரத்” எனவும், இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர் என்று குறிப்பிட்டு சத்குரு பேசியிருக்கும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் சேவாக்கின் இந்த பதிவிற்கு பதிலளித்திருக்கும் திரைப்பட நடிகர் விஷ்னு விசால், “இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களை பெருமிதம் கொள்ள வைக்கவில்லையா?” என்ற கேள்வியை சேவாக்கிடம் எழுப்பியுள்ளார்.

மேலும், “இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர். அது நம்முடைய பெயர் இல்லை பாரத தேசம் தான் நம்முடைய பெயர்” என திரைப்பட நடிகர் பவன் கல்யாண் சில வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று மீண்டும் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com