அபுதாபி டி10 தொடர்| நவ. 18 தொடக்கம்.. ஹர்பஜன், ஸ்ரீசாந்த், சாவ்லா ஒப்பந்தம்!
அபுதாபியில் நடைபெறவுள்ள டி10 கிரிக்கெட் தொடரில், புதிதாக 5 அணிகள் உட்பட மொத்தம் 8 அணிகள் களமிறங்குகின்றன.
டி10 லீக்கின் ஒன்பதாவது சீஸன் நவம்பர் 18 முதல் 30 வரை அபுதாபியில் உள்ள சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த், பியூஷ் சாவ்லா போன்ற முன்னாள் இந்திய வீரர்கள், மேற்கிந்தியத் தீவுகளின் பொல்லார்ட், தென்னாப்பிரிக்காவின் டு பிளெஸ்ஸிஸ் உட்பட பல உலக நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். ஹர்பஜன் சிங் ஆஸ்பின் ஸ்டாலியன்ஸ் அணிக்கும், ஸ்ரீசாந்த் விஸ்டா ரைடர்ஸ் அணிக்கும், பியூஷ் சாவ்லா அஜ்மான் டைட்டன்ஸ் அணிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அஜ்மான் டைட்டன்ஸ் அணியில், மொயீன் அலி, ரிலீ ரோசோவ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஹர்பஜன் சிங் இடம்பெற்றுள்ள ஆஸ்பின் ஸ்டாலியன்ஸ் அணியில், சாம் பில்லிங்ஸ், டைமல் மில்ஸ் மற்றும் ஆண்ட்ரே பிளெட்சர் உள்ளிட்டோர் முக்கிய வீரர்களாக உள்ளனர். விஸ்டா ரைடர்ஸ் அணியில், ஃபார் டு பிளெஸ்ஸிஸ், மேத்யூ வேட், டுவைன் பிரிட்டோரியஸ், தில்ஷன் மதுஷங்க, முரளி விஜய் உள்ளிட்ட வீரர்கள் வலு சேர்க்கின்றனர்.
நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸ்ஸல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் டேவிட் வைஸ் ஆகியோரைக் கொண்ட அணியாக டெக்கான் கிளாடியேட்டர்ஸ் விளங்குகிறது. டெல்லி புல்ஸ் அணியில் கீரோன் பொல்லார்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இவ்வணியில் டிம் டேவிட், ரோவ்மன் பவல், பில் சால்ட் ஆகியோர் துணை நிற்கிறார்கள். நார்தர்ன் வாரியர்ஸ் அணியில் ஷிம்ரான் ஹெட்மியர், டிரென்ட் போல்ட், தப்ரைஸ் ஷம்சி, தினேஷ் சண்டிமால் ஆகியோரும், ராயல் சாம்பியன்ஸ் அணியில் ஜேசன் ராய், ஏஞ்சலோ மேத்யூஸ், ஷகிப் அல் ஹசன், கிறிஸ் ஜோர்டான் ஆகியோரும் முக்கிய வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். குவெட்டா கவால்ரி அணியில் லியாம் லிவிங்ஸ்டோன், ஜேசன் ஹோல்டர், முகமது அமீர், சிக்கந்தர் ராசா, இம்ரான் தாஹிர், அப்பாஸ் அஃப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.