’தொடர்ந்து அதிகரிக்கும் விமர்சனங்கள்..’ இன்ஸ்டாவில் அபிஷேக் சர்மா போட்ட பதிவு!
சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதையடுத்து அபிஷேக் சர்மா மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. ஜிம்பாப்வே தொடரில் குறைந்த ரன்கள், கடந்த 20 போட்டிகளில் 3 அரைசதங்கள் மட்டுமே என்பதால் அவரது ஃபார்ம் கேள்விக்குறியாகியுள்ளது. முன்னாள் வீரர்கள், சஞ்சுவுக்கு ஒரு விதி, அபிஷேக்கிற்கு வேறு விதி என குற்றம்சாட்டும் நிலையில், அபிஷேக் இன்ஸ்டாவில் வருத்தத்தையும் மீண்டும் வலிமையாக திரும்புவேன் என்ற உறுதியையும் பகிர்ந்துள்ளார்.
இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதிலிருந்தே அபிஷேக் சர்மா மீது அதிக அழுத்தம் விழுந்துள்ளது. 2026 டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி உட்பட அனைத்து நாக் அவுட் போட்டிகளிலும் அரைசதமடித்த சஞ்சு சாம்சன், இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டதும் இல்லாமல், கிடைத்த வாய்ப்புகளில் சரியாக விளையாடவில்லை என சஞ்சு சாம்சன் டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் சொற்ப ரன்களே அடித்த அபிஷேக் சர்மா, கடைசி 20 போட்டிகளில் 3 அரைசதங்களை மட்டுமே அடித்துள்ளார். அதிலும் அவருடைய ஃபார்ம் மோசமானதாகவே இருந்துவருகிறது. உலகக்கோப்பையின் போதே அபிஷேக் சர்மா மீது விமர்சனங்கள் எழுந்தநிலையில், தற்போது சஞ்சு சாம்சன் நீக்கப்பட்ட பிறகு மேலும் அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் முன்னாள் இந்திய வீரர்கள் அபிஷேக் சர்மா சரியாக விளையாடவில்லை என்றாலும் வாய்ப்பு வழங்கப்படுகிறது, சஞ்சுவுக்கு ஒரு ரூல் அபிஷேக் சர்மாவிற்கு ஒரு ரூலா என விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் தான் தன்மீதான விமர்சனங்களுக்கு மத்தியில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் அபிஷேக் சர்மா, சரியாக விளையாட முடியாமல் போனதற்கு தன்னுடைய வருத்தத்தை பதிவுசெய்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் அவர், “பலர் உன்னால் முடியும் என்று நம்மீது நம்பிக்கை வைத்து, அதை திருப்பிக் கொடுக்க முடியாதபோது அது வலிக்கிறது. ஆனால், தொடர்ந்து முயற்சிப்பவர்களுக்கு இந்த விளையாட்டு எப்போதும் வெகுமதி அளிக்கும். அணி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இன்னும் வலிமையாகத் திரும்புவோம்” என பதிவிட்டுள்ளார். இருப்பினும் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா குறித்து விவாதங்கள் தொடர்ந்து சமூகவலைதளங்கலில் நடந்துவருகிறது.

