அனல்பறந்த களம்.. மோதிக்கொண்ட வீரர்கள்! பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா! திலக் வர்மாவை சாடும் ரசிகர்கள்!
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதினாலே அது சரவெடியான போட்டியாகவே இருந்துவருகிறது. சர்வதேச கிரிக்கெட், யூத் கிரிக்கெட் அனைத்திலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், யூத் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் எப்போதும் கனிசமான வெற்றிகளை இந்தியாவிற்கு எதிராக பதிவுசெய்துள்ளது. அதில் 2025 யு19 ஆசிய கோப்பை ஃபைனல்ஆனது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றியாகும். ஆனால் 2026 யு19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இளம் இந்திய அணி கடைசிபந்தில் பவுண்டரி அடித்து வென்று, பாகிஸ்தானுக்கு மறக்கவேமுடியாத பதிலடி கொடுத்தது.
கடந்த நவம்பர் 14ஆம் தேதி நடந்த விறுவிறுப்பான யு19 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி மோதலில், வெற்றிக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களை இந்திய வீரர்கள் கடுமையான சைகைகள் மூலம் மாக் செய்தது பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. பாகிஸ்தான் முன்னாள் வீரர்களான முகமது யூசுப், ஷோயப் அக்தர் போன்ற பலபேர் இந்திய வீரர்களின் நடத்தையை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்தசூழலில் ஒருவாரத்திற்கு முன்பு நடைபெற்ற பரபரப்பான மோதலுக்கு பிறகு 2026 ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசியக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மீண்டும் நேற்றைய போட்டியில் மோதின. இந்தப்போட்டியின் மீதும் அதிகப்படியான எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 313 ரன்கள் குவித்தது.
சதமடித்தும் விமர்சிக்கப்படும் திலக் வர்மா!
314 ரன்கள் அடித்தால் வெற்றிஎன விளையாடிய இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி 11 ரன்னிலும், ஆயுஷ் பதோனி 0 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். 26-க்கு 2 விக்கெட்டுகளை இந்தியா இழந்தாலும் 6 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா இந்தியாவிற்கு நம்பிக்கை கொடுத்தார். ஆனால் அவரும் 70 ரன்னுக்கு நடையைகட்ட அடுத்தடுத்து வந்த குமார் குஷாக்ரா, ரிங்கு சிங், சூர்யான்ஷ் ஷெட்கே அனைவரும் ஓரிலக்க ரன்னில் வெளியேறி அதிச்சி கொடுத்தனர்.
129 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்த நிலையில், திலக்வர்மா மிகவும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 95 பந்தில் அவர் அடித்த அரைசதம் நம்பிக்கையை கொடுத்தாலும், அதற்கடுத்தும் அவர் அடித்து ஆட முயற்சிக்காதது ரசிகர்களால் கடுமையான விமர்சனத்தை சந்தித்துவருகிறது. ஒருபக்கம் திலக் வர்மா டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்க, 4 சிக்சர்கள் அடித்து நம்பிக்கை கொடுத்த ஷபாஷ் அகமது 56 ரன்னில் அவுட்டானார். அடுத்துவந்த ஹர்சித் ராணா, விப்ராஜ் நிகம் இருவரும் 0 ரன்னில் வெளியேற, கடைசிவரை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய திலக் வர்மா 148 பந்தில் 100 ரன்கள் அடித்து அவுட்டானார்.
265 ரன்னுக்கு சுருண்ட இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. போட்டி முழுவதும் இந்திய வீரர்களும் பாகிஸ்தான் வீரர்களும், மோதலிலும், காரசாரமான வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பாகிஸ்தான் பேட்டிங் செய்தபோது ஹர்சித் ராணா பாகிஸ்தான் வீரர்களை சீண்டிய நிலையில், அவர் அவுட்டாகி வெளியேறும்போது மொத்த பாகிஸ்தான் அணியும் அவரை சீண்டியது. களத்தில் திலக் வர்மாவும் மொத்த 11 பாகிஸ்தான் வீரர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இத்தனை கலவரத்திற்கு இடையிலும் திலக் வர்மாவின் ஸ்லோவான ஆட்டத்தையே ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். விக்கெட் போனாலும் பாகிஸ்தான் அதிரடி ஆட்டத்தை விட்டுக்கொடுக்காத நிலையில், இந்தியாவின் சுமாரான பேட்டிங்கும், திலக் வர்மாவின் ஸ்லோவான பேட்டிங்கும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு யு19 இந்திய அணி தோல்விக்கு பிறகு இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியதை போன்றே, இந்தியா ஏ அணியும் வீழ்த்த வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

