4 இந்திய ஸ்பின்னர்கள் VS “பாஸ்பால்” அட்டாக்! வெல்லப்போவது யார்? தரமான டெஸ்ட் தொடர் Ready!

இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜஸ்பிரித் பும்ரா துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ashwin - jadeja - axar - kuldeep
ashwin - jadeja - axar - kuldeepX

இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடர் முடிவடைந்த பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடவிருக்கிறது. ஜனவரி 25ம் தேதிமுதல் நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது.

இரண்டு சாம்பியன் அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொடர் என்பதாலும், இந்தத்தொடர் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்துவருகிறது. இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று காலை அறிவித்துள்ளது.

முதல் போட்டியில் களமிறங்கும் இளம் வீரர் துருவ் ஜுரேல்!

முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் இளம் வீரர் துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் இருந்துவரும் இஷான் கிஷான் விவகாரத்தில் மேலும் சூடுபிடிக்கும் விதமாக வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

ரஞ்சிக்கோப்பையில் இரட்டை சதமடித்த சட்டீஸ்வர் புஜாராவிற்கும் இடம் கிடைக்கவில்லை. ஒருவேளை கடைசி 3 போட்டிகளுக்கான அணியில் இடம்பெறுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. காயம் காரணமாக முகமது ஷமி முதலிரண்டு போட்டிகளில் இடம்பெறவில்லை.

dhruv jurel
dhruv jurel

முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்.கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்.கீப்பர்), துருவ் ஜுரேல் (விக்.கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணைக்கேப்டன்), அவேஷ் கான்

தரமான 4 இந்திய ஸ்பின்னர்கள் VS பாஸ்பால் அட்டாக்!

முன்னாள் நியூசிலாந்து வீரர் ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமையில் பென் ஸ்டோக்ஸ் கேப்டன்சியில் விளையாடிவரும் இங்கிலாந்து டெஸ்ட் அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் “பாஸ்பால்” என்ற அதிரடி ஆட்டமுறையை பின்பற்றிவருகிறது.

இந்த ஆட்டத்தின் அணுகுமுறை என்பது, போட்டியின் எந்த இடத்திலும் அதிரடியான ஆட்டத்தை ஆடுவதன் மூலம் வெற்றியை ருசிக்க முடியும் என்பதுதான். இந்த அதிரடி ஆட்டமுறை தொடக்கத்தில் விமர்சனம் செய்யப்பட்டாலும், இங்கிலாந்து தொடர்ச்சியான வெற்றியின் மூலம் அனைவரையும் வாயடைக்க வைத்தது.

Ben Stokes
Ben Stokes

கடந்த 2023 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கூட, நீங்கள் மற்ற அணிகளை எல்லாம் வீழ்த்திவிடலாம், ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உங்களின் “பாஸ்பால்” பூச்சாவெல்லாம் பலிக்காது என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. அதற்கேற்றார்போல் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலை பெற, இங்கிலாந்தின் மீது அதிகப்படியான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் 2 போட்டிகளை இழந்தபோதும் விட்டுக்கொடுக்காத இங்கிலாந்து அணி 2-2 என தொடரை சமன்செய்து கெத்துக்காட்டியது. இருப்பினும் கடைசி 3 போட்டிகளில் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயன் இல்லாமல் போனதால்தான் இங்கிலாந்தால் வெல்ல முடிந்தது. ஆனால் இந்தியாவில் ஒரு ஸ்பின்னர் மட்டும் இல்லை, ஒருவர் போனால் ஒருவர் என 3 ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள், அங்கு உங்களால் சாதிக்க முடியாது என்று கூறப்பட்டது.

Ben Stokes
Ben Stokes

இந்தியாவில் பாஸ்பால் அணுகுமுறை வெல்லுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பென் ஸ்டோக்ஸ், “நாங்கள் நியூசிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தபோது வெளியில் என்ன பேசினார்கள் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. நியூசிலாந்தில் வென்றிருந்தாலும் உங்களால் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக வெல்ல முடியாது என்று கூறினார்கள். பின்னர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக வென்ற பிறகு பாகிஸ்தானுக்கு எதிராகவும், அதற்கு பிறகு ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் வெல்லவே முடியாது என்று கூறினார்கள். தற்போது இந்தியாவுக்கு எதிராக அதைச் செய்ய முடியுமா என்று கேட்கிறார்கள், யாருக்குத் தெரியும் காலம்தான் பதில் சொல்லும்” என்று கூறியிருந்தார்.

kuldeep yadav
kuldeep yadav

இந்நிலையில்தான் இங்கிலாந்து அணியை சோதனைக்குள் தள்ளும் விதமாக இந்திய அணி 4 ஸ்பின்னர்களோடு களம்காண்கிறது. ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் என்ற 3 இந்திய ஸ்பின்னர்கள் தான் எப்போதும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பார்கள். ஆனால் தற்போதைய சூழலில் குல்தீப் யாதவ் சிறப்பான ஃபார்மில் இருப்பதால் 4வது ஸ்பின்னராக அவரையும் அணிக்குள் இறக்கியுள்ளது இந்தியா. அடடே இது லிஸ்ட்லயே இல்லையே என்பதுபோல் இங்கிலாந்தை சோதிக்கவுள்ளது இந்தியா. இந்த 4 ஸ்பின் பட்டாளத்தை தாண்டி “பாஸ்பால்” வெற்றிபெறுமா என்பது மிகப்பெரிய கேள்விதான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com