ICC அறிவித்த மகளிர் கனவு அணி.. இடம்பிடித்த 3 இந்திய வீராங்கனைகள்!
நடைபெற்று முடிந்த பெண்கள் உலகக் கோப்பையின் சிறந்த அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டிருக்கிறது.
2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி முதல்முறையாக உலகக்கோப்பை வென்று வரலாறு படைத்துள்ளது இந்திய மகளிர் அணி. இதன்மூலம் 47 ஆண்டுகால இந்திய மகளிர் அணியின் ஏக்கம் தணிந்து, கனவு நிறைவேறியுள்ளது.
இந்த நிலையில், நடைபெற்று முடிந்த பெண்கள் உலகக் கோப்பையின் சிறந்த அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டிருக்கிறது. இந்த அணியில் இந்திய அணியின் துணை கேட்பன் ஸ்மிரிதி மந்தனா, இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ், இறுதிப்போட்டியில் ஆட்டநாயகி விருதுபெற்ற் தீப்தி ஷர்மா என 3 இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றிருக்கிறார்கள்.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கனவு அணிக்கு தென்னாபிரிக்க அணித் தலைவி லாரா வோல்வர்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருடன் மற்றொரு தொடக்க வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனாவும், ஒன் டவுன் வீராங்கனையாக ஜெமிமா ரோட்ரிக்ஸும் அறிவிக்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஆல்ரவுண்டர்களான மாரிசன் கேப், நாடெய்ன் டி கிளார்க் உடன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லி கார்ட்னர், அன்னபெல் சதர்வேண்ட் ஆகியோர் மத்திய வரிசையில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் இறுதிப்போட்டி நாயகி தீப்தி ஷர்மாவும் மத்திய வரிசையில் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பராக ஆச்சர்யமளிக்கும் வகையில் பாகிஸ்தானைச் சேர்ந்த சிட்ரா நவாஸ் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர்களான அலேனா கிங் மற்றும் சோஃபி எக்கிள்ஸ்டோன் ஆகியோர் ஐசிசி அணியில் இடம்பிடித்துள்ளனர்.
ஸ்மிருதி மந்தனா, லாரா வோல்வோர்ட், ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் காப், ஆஷ் கார்ட்னர், தீப்தி சர்மா, அன்னாபெல் சதர்லேண்ட், நாடின் டி கிளார்க், சித்ரா நவாஸ், அலனா கிங், சோபி எக்லெஸ்டோன்

