தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டி கேப்டவுன் நகரில் இன்று தொடங்கியது.
தொடரை சமன்செய்ய வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. 9 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ் விக்கெட் வேட்டை நடத்தினார்.
உடன் பும்ரா மற்றும் முகேஷ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த 55 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா அணி சுருண்டது.
தென்னாப்பிரிக்க அணியை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, ரோகித் மற்றும் கில் இருவரின் சிறப்பான ஆட்டத்தால் நல்ல தொடக்கத்தை பெற்றது. பின்னர் இன்னிங்ஸை எடுத்துச்சென்ற விராட் கோலி இந்தியாவை 150 ரன்களுக்கு மேல் எடுத்துச்சென்றார். 153 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளுடன் இந்திய அணி இருந்த போது, ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை அள்ளிய லுங்கி இங்கிடி போட்டியை தலைகீழாக திருப்பினார்.
46 ரன்னில் இருந்த விராட் கோலி அவுட்டாகி வெளியேற, கடைசி 11 பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி 153 ரன்னுக்கே இந்தியாவை சுருட்டி அசத்தியது.
98 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது தென்னாப்பிரிக்கா அணி. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் எல்கர் மற்றும் மார்க்ரம் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு பும்ராவும், சிராஜும் போராடிய நிலையில், டீன் எல்கரை 12 ரன்னில் வெளியேற்றிய முகேஷ் குமார் அசத்தினார். அடுத்துவந்த டோனி டேவையும் 1 முகேஷ் வெளியேற்ற, உடன் களத்திற்கு வந்த ஸ்டப்ஸை அவுட்டாக்கி பெவிலியன் அனுப்பினார் பும்ரா. தென்னாப்பிரிக்கா 62 ரன்னுக்கு 3 விக்கெட் இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் 1902ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் நாளில் 23 விக்கெட்டுகளை இழந்திருக்கும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா போட்டி, ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் நாளிலேயே அதிக விக்கெட்டுகளை இழந்த இரண்டாவது போட்டியாக மாறியுள்ளது. 1902ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் நாள் டெஸ்ட் போட்டியில் 25 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், இன்றைய போட்டியில் 23 விக்கெட்டுகள் விழுந்துள்ளன.