பாக். - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே மோதல்
உலகக் கோப்பை தொடரில் போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே மோதிக் கொண்டனர்.
உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி லீட்ஸில் உள்ள ஹெட்லிங்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கான் முதலில் பேட்டிங் செய்தது. 40 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இதனிடையே, மைதானத்திற்கு வெளியே பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. பலுசிஸ்தானுக்கு விடுதலை என்ற முழக்கத்துடன் கூடிய பலூனை ஆப்கான் ரசிகர்கள் சிலர் பறக்கவிட்டுள்ளனர். அதனைக் கண்ட பாகிஸ்தான் ரசிகர்கள் அவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், மைதானத்திற்கு வெளியே கூட்டம் கூடியது. பாதுகாப்பு ஊழியர்கள் அவர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்தனர்.
இன்றையப் போட்டி பாகிஸ்தான் அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அது பாகிஸ்தானுக்கான அரையிறுதி வாய்ப்பை அதிகப்படுத்தும். ஆனால், ஏற்கனவே எல்லாப்போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள ஆப்கான் அணிக்கு இது முக்கியமான போட்டியல்ல.

