பச்சைத் தமிழனாக மாறிய ஹர்பஜன்.. கொண்டாடும் மீம்ஸ் கிரியேட்டர்கள்!
பஞ்சாப்பில் பிறந்த ஹர்பஜன் சிங் பச்சைத் தமிழனாக மாறிவிட்டதாக மீம்ஸ் கிரியேட்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக விளையாடி வந்த ஹர்பஜன் சிங், இந்தாண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக விளையாடவுள்ளார். 136 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஹர்பஜன், 127 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்தாண்டு சி.எஸ்.கே. அணிக்காக விளையாடவுள்ள நிலையில் ஆர்வமுடன் தமிழ்க் கற்று, அதில் ட்வீட்டும் போட்டு வருகிறார் ஹர்பஜன்.
கடந்த 22ஆம் தேதி அவர் போட்ட ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், “நான் வந்துட்டேன்னு சொல்லு. தமிழின் அன்பு உடம்பிறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா. உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, "வீரமா", காது கிழியிற உங்க விசிலுக்கு நடுவுல. @ChennaiIPLக்காக விளாட(ச) போறத நெனச்சாலே "மெர்சலாகுது". தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!!” எனக் கூறியிருந்தார்.
அன்று முதலே தமிழர்களின் பாசப்பிள்ளையாக மாறிவிட்டார் ஹர்பஜன்.
அன்றே ஹர்பஜன் தமிழனாக மாறிவிட்டார் பல மீம்ஸ்களும் வலம் வந்தன.
இந்நிலையில் இன்று “தமிழ்நாட்டுக்கு வருகை தந்த நாளில் இருந்து தமிழ் மக்கள் என் மேல் காட்டும் அளவு கடந்த பாசமும், நேசமும் என்னை வியக்கவைக்கிறது. உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை ஏற்று கொண்டமைக்கு நன்றி. அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே. இந்தப் பந்தம் தொட்டு தொடரும் ஒரு பட்டு பாரம்பரியமாக தொடரட்டும்.
நான் சரியானவன் அல்ல. சில நேரங்களில் முட்டாள் தனமான செய்திகளும் சொல்வது உண்டு. தேவை அற்ற நேரங்களில் சிரிப்பதும் உண்டு. சற்று வேடிக்கையானவன் தான், ஆனாலும் நிறம் மாறுவது இல்லை. என்னை விரும்பினாலும் வெறுத்தாலும், நான் ஒரு சத்தியம் செய்கிறேன் நான் உங்களை விரும்புகிறேன் அருமை” என ஹர்பஜன் ட்விட் செய்துள்ளார்.
இந்த ட்விட்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மேலும் இதை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் பச்சைத் தமிழன் ஹர்பஜன், தமிழ்ப்புலவன் ஹர்பஜன் என பல பட்டங்களை வழங்கி மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.