"தண்ணீரை சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது தவறவிட வேண்டாம்"- கிரிக்கெட் வீரர் அஸ்வின்
தண்ணீரை சேமிக்க அடுத்த வாய்ப்பு கிடைக்கும்போது மிகுந்த அக்கறையுடன் நீர் நிலைகளில் தண்ணீரை சேமிக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வின் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. சென்னையில் மக்கள் குடங்களை தூக்கிக் கொண்டு தெருத்தெருவாக தண்ணீருக்கு அலைகின்றனர். குளிப்பதற்கு, பாத்திரங்களை கழுவுவதற்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை. என்ன செய்வெதென்பதே மக்களுக்கு புரியவில்லை. இதனிடையே தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் திடீரென வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்ததால் மக்கள் மேலும் பீதியடைந்தனர். ஆனால் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி கொடுக்கப்பட்டதால், வேலைநிறுத்தத்தை அவர்கள் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வின், “ தமிழகம் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது. தண்ணீர் சேமிக்க அடுத்த வாய்ப்பு கிடைக்கும்போது மிகுந்த அக்கறையுடன் நீர்நிலைகளில் நாம் தண்ணீரை சேமிக்க வேண்டும்.
நமது அடுத்த தலைமுறையினர் நிம்மதியாக வாழ எதையாவது விட்டுச் செல்ல வேண்டும். வறட்சியை போக்க உங்களிடம் ஏதாவது கருத்து இருக்கிறதா” எனக் கேட்டுள்ளார். இதனையடுத்து எப்படியெல்லாம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த முடியும்..? வறட்சியை தவிர்ப்பது எப்படி உள்ளிட்ட கருத்துகளை ரவிச்சந்திரன் ட்விட்டர் பின்னூட்டத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.