
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 16வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் ரோகித் சர்மா. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் (51), அக்சர் பட்டேல்(54) அபாரமாக விளையாடி ஆட்டம் இழந்தனர். 19.4 ஓவர்களில் 172 ரன்கள் அடித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆல் அவுட் ஆனது.
173 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். இஷான் கிஷன் 31 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அடுத்ததாக உள்ளே வந்த திலக் வர்மா ரோகித் சர்மாவுடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 68 ரன்கள் சேர்த்து, 41 ரன்களில் அவுட் ஆனார். சூரியக்குமார் யாதவ் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். பின்னர் ரோகித் சர்மா 65 (45) ரன்கள் அடித்து வெளியேற, கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு ஐந்து ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் ஜோடி அந்த வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளில் அரைசதம் அடித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, நேற்று சில சாதனைகளையும் முறியடித்திருக்கிறார். இந்த போட்டிக்கு முன்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிராக 912 ரன்கள் அடித்து, குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தார். விராட் கோலி 925 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். பின்னர் டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் ரோகித் சர்மா 65 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 977 ரன்களுடன் இந்த பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மூன்றாவது இடத்தில் ரஹானே இருக்கிறார்.