
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் நடத்தாது என்றும், பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ஆசியக்கோப்பை தொடர் இலங்கை மற்றும் அமீரகத்தில் நடத்தப்படும் என்றும் அதற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இருக்கும் நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் தொடங்குவதாக இருந்தது. 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்பு இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடி இரு நாட்டு கிரிக்கெட் தொடர்கள் ஏதும் நடைபெறவில்லை. அதேவேளையில் ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டும் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு சென்று ஆசியக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு இந்தியா ஆரம்பம் முதலே அதிருப்தி தெரிவித்திருந்தது. மேலும் பொதுவான நாடுகளில் விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தது.
இதேபோல ‘இந்தாண்டு இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பையில் நாங்கள் பங்கேற்கமாட்டோம்’ என பாகிஸ்தானும் போர்க்கொடி தூக்கியது. இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.
இதற்கிடையே ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகம் கூடி பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. அதன்முடிவில், பாகிஸ்தானுக்கு வெளியே ஆசிய கோப்பை தொடரை நடத்துவதற்கு இலங்கை, வங்கதேச நாடுகள் உட்பட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையொட்டி ‘பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பதால் பாகிஸ்தான் இந்த தொடரை புறக்கணிப்பு செய்யலாம் அல்லது வெளிநாட்டில் நடக்கும் தொடரில் பங்கேற்கலாம்’ என சொல்லப்படுகிறது.
இதில் தற்போது அடுத்த அப்டேட்டாக ‘செலவுகளை குறைப்பதற்காக இலங்கை அல்லது ஐக்கிய அரபு நாடுகளில் தொடரை நடத்த ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டுள்ளது’ எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இடம் மாறினால் தொடரையே புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மற்றொருபக்கம் ‘ஆசிய கோப்பை போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்தவேண்டும்’ என்ற பிசிசிஐயின் முடிவிலும் மாற்றம் இல்லை. இதற்கு இலங்கை மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆசிய கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.