ஐபிஎல் ஒத்திவைக்கப்படுகிறதா? - நாளை மறுநாள் முடிவு!
13-ஆவது ஐபிஎல் டி20 தொடர் இம்மாதம் 29-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது 97 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க பொது இடங்களில் கூட வேண்டாமென்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி "ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம், பிசிசிஐ தரப்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படும்" என கூறப்பட்டது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரை குறிப்பிட்ட தேதியிலேயே நடத்தலாமா? அல்லது ஒத்திவைக்கலாமா என்பது குறித்து மார்ச் 14 ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.