ஆடவர் கிரிக்கெட்டின் முதல் பெண் நடுவர் கிலாரே போலோசாக் !
ஆடவர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் முதல் பெண் நடுவராக ஆஸ்திரேலியாவின் கிலாரே போலோசாக் களமிறங்கவுள்ளார்.
ஆடவர் கிரிக்கெட் வரலாற்றில் நடுவர்களாக ஆண்களே இதுவரை இருந்துவந்தனர். இதற்கு மாறாக தற்போது முதல் முறையாக ஆண்கள் கிரிக்கெட்டில் ஒரு பெண் நடுவராக செயல்படவுள்ளார். சனிக்கிழமை நடைபெறும் ஐசிசி உலக கிரிக்கெட் லீக் டிவிஷன் 2 தொடரின் இறுதிப் போட்டியில், கிலாரே போலோசாக் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் நமீபியா மற்றும் ஓமன் ஆடவர் கிரிக்கெட் அணிகள் விளையாடுகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து போலோசக், “முதல் முறையாக ஆண்கள் போட்டியில் நடுவராக நிற்கப்போவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் நடுவராக எவ்வளவு வளர்ந்துள்ளேன் என்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கிரிக்கெட் விளையாட்டில் பெண் நடுவர்கள் நிற்பதை அதிகப்படுத்த வேண்டும். பெண்களால் ஆடவர் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயல்பட முடியும்” எனத் தெரிவித்தார். போலோசக்கிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஐசிசி மேலாளர் கிரிஃபித், “ஆண்கள் கிரிக்கெட்டில் முதல் பெண் நடுவராக செயல்படவுள்ள கிலாரேவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்” என வாழ்த்தியுள்ளார்.
போலோசக் இதுவரை 15 மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் நடுவராக பணியாற்றியுள்ளார். அத்துடன் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டியிலும் நடுவராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.