ஆத்தாடி, 18 சிக்ஸ்... கிறிஸ் கெய்ல் சாதனை மேல் சாதனை!
பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டியின் பைனலில் 18 சிக்சர்கள் அடித்து கிறிஸ் கெய்ல் சாதனை படைத்தார். அதோடு டி20 போட்டியில் 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் நடந்து வருகிறது. இதில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக வெஸ்ட் இண்டீஸின் கிறில் கெய்ல் ஆடிவருகிறார். எட்டு அணிகள் கலந்துகொண்ட இத்தொடரின் இறுதி போட்டி நேற்று நடந்தது. தாகா டைனமைட்ஸ் அணியும் ரங்பூர் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற தாகா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பின்னர் ஆடிய ரங்பூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் கெய்லும் நியூசிலாந்து வீரர் மெக்கல்லமும் இணைந்து எதிரணி பந்துவீச்சை சிதறடித்தனர். ஷாகித் அப்ரிதி உட்பட பலரின் பந்துவீச்சை சிதறடித்து 69 பந்துகளில் 146 ரன்கள் குவித்தார் கெய்ல். இதில் 18 சிக்சர்களும் அடங்கும். ஒரே போட்டியில் இத்தனை சிக்சர்களை யாரும் அடித்ததில்லை. இதையடுத்து சாதனை பட்டியலில் சேர்ந்துள்ளார். இது அவருக்கு 20-வது டி20 சதம். டி20 போட்டியில் 20 சதங்களை யாரும் தொட்டதில்லை. அதோடு டி20 போட்டிகளில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து அந்த அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 206 ரன் குவித்தது. பின்னர் ஆடிய தாகா அணி தோல்வியை தழுவியதால் ரங்பூர் அணி, சாம்பியன் பட்டம் வென்றது.