ஐயையோ, டேஞ்சர் பேட்ஸ்மேனாச்சே: லெவிஸை புகழும் கெய்ல்
மேற்கிந்திய தீவுகள் அணியின் டேஞ்சர் பேட்ஸ்மேனாக, எவின் லெவிஸ் இருக்கிறார் என்று அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்த நாட்டு அணிக்குத் திரும்பிய கிறிஸ் கெய்ல், இந்தியாவுடன் நடந்த டி20 போட்டியில் கலந்துகொண்டார். அந்தப் போட்டியில் எவின் லெவிஸ் சதமடித்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார்.
இதுபற்றி பேசிய கிறிஸ் கெய்ல், ‘மேற்கிந்திய தீவுகளின் அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக ஆடுகிறார்கள். குறிப்பாக லெவிஸ். பசி கொண்டவர் போல ஆடுகிறார். அவர் டேஞ்சரஸ் பேட்ஸ்மேனாக உருவெடுத்திருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக இரண்டு செஞ்சுரிகளை அடித்து அசத்தி இருக்கிறார். அவர் சக்திவாய்ந்த வீரர். மேற்கிந்திய தீவுகள் அணியின் எதிர்காலம் அவர். அதே போல எங்கள் பந்துவீச்சும் சிறப்பாக இருக்கிறது. 2019-ல் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிதான் எங்கள் இலக்கு. அதை நோக்கி பயணிக்கிறோம். கிரிக்கெட் வீரர்களுக்கும் எங்கள் நாட்டின் வாரியத்துக்கும் இடையிலான உறவு முன்னேறிக் கொண்டிருக்கிறது’ என்றார்.