வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டன் ஆனார் கிறிஸ் கெய்ல்
உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக மூத்த வீரர் கிறிஸ் கெய்ல் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30 ஆம் தேதி தொடங்கி ஜூலை 14 ஆம் தேதி வரை நடக்கிறது. இங்கிலாந்தில் நடக்கும் இந்த போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், ஐபிஎல். தொடரில் மிரட்டும் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸல், 39 வயதான கிறிஸ் கெய்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கெய்லுக்கு இது 5-வது உலக கோப்பை போட்டி.
இந்நிலையில் உலகக் கோப்பைக்கான அணிக்கு அவரை துணை கேப்டனாக, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
இதுபற்றி கெய்ல் கூறும்போது, ’’வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவது எப்போதும் எனக்கு பெருமை. உலகக் கோப்பை போட்டி ஸ்பெஷலானது. மூத்த வீரராக, அணியின் கேப்டன் உள்ளிட்ட வீரர்களுக்கு உதவும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
அணி விவரம்:
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பேபியன் அலென், டேரன் பிராவோ, கார்லஸ் பிராத்வெய்ட், ஷெல்டன் காட்ரெல், கேப்ரியல், கிறிஸ் கெய்ல், ஹெட்மயர், ஷாய் ஹோப், எவின் லெவிஸ், அஷ்லே நர்ஸ், நிகோலஸ் பூரன், கெமர் ரோச், ஆந்த்ரே ரஸல், ஒஷானே தாமஸ்.