300 சிக்ஸர் விளாசி சாதனை - எட்ட முடியாத இடத்தில் கிறிஸ் கெயில்
ஐபில் கிரிக்கெட் போட்டிகளில் முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 300 சிக்ஸர் விளாசியுள்ளார்.
மெஹாலியில் நடைபெற்று வரும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கெயில் 24 பந்தில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில், 4 சிக்ஸர், 3 பவுண்டரிகள் விளாசினார். இந்தப் போட்டியில் 2 சிக்ஸர்கள் அடித்த போதே, ஐபிஎல் தொடரில் 300 சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற மைல்கல்லை கெயில் எட்டியுள்ளார். 100 சிக்ஸர், 200 சிக்ஸர் அடித்த முதல் வீரரும் இவர்தான்.
2009ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர்களில் கிறிஸ் கெயில் விளையாடி வருகிறார். 115 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இதுவரை மொத்தம் 302 சிக்ஸர் விளாசியுள்ளார். இதில் அதிகபட்சமாக, 2012ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 59 சிக்ஸர் விளாசியுள்ளார். அதற்கடுத்து, 2013இல் 51 சிக்ஸர் அடித்தார்.
கெயிலுக்கு அடுத்தபடியாக, டிவில்லியர்ஸ் 192 சிக்ஸர் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆனால், கெயிலுக்கும், டிவில்லியஸுக்கும் இடையில் 110 சிக்ஸர் இடைவெளி உள்ளது. 187 சிக்ஸர் உடன் தோனி மூன்றாவது இடத்திலும், 186 சிக்ஸர்களுடன் சுரேஷ் ரெய்னா நான்காவது இடத்திலும் உள்ளானர். ரோகித் 185, விராட் 178 சிக்ஸர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 100 சிக்ஸர் இடைவெளி உள்ளதால் கெயிலின் சிக்ஸர் சாதனையை எட்டுவது மற்ற வீரர்களுக்கு சிரமமான ஒன்றுதான்.