INDvsAUS: 2வது டெஸ்ட் போட்டியில் புஜாரா செய்ய இருக்கும் சாதனைகள் என்ன தெரியுமா?

INDvsAUS: 2வது டெஸ்ட் போட்டியில் புஜாரா செய்ய இருக்கும் சாதனைகள் என்ன தெரியுமா?
INDvsAUS: 2வது டெஸ்ட் போட்டியில் புஜாரா செய்ய இருக்கும் சாதனைகள் என்ன தெரியுமா?

டெல்லியில் நடைபெற இருக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் புஜாரா, தன்னுடைய 100வது போட்டியில் களம் காண உள்ளார்.

தொடரில் இந்தியா முன்னிலை

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி, தற்போது பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தத் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கான இறுதிச்சுற்று வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. அதிலும் இந்தத் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையே கடந்த 9ஆம் தேதி நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

100 டெஸ்ட் போட்டியில் புஜாரா

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கான 2வது டெஸ்ட் போட்டி வருகிற 17ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டி, இந்திய அணி வீரர் புஜாராவுக்கு 100வது டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் கால்பதித்த புஜாரா, இன்று அதே அணிக்கு எதிராக 100வது போட்டியில் களம் காண இருக்கிறார். அவர், 2010இல் பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது டெஸ்டில் அறிமுகமாகி இருந்தார். அந்த டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் புஜாரா 72 ரன்கள் எடுத்தார். மேலும், அந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

அதுமட்டுமின்றி, 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 13வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும், தற்போதைய அணியில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் இதன்மூலம் புஜாரா நிகழ்த்த உள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் மொஹாலியில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தனது 100வது போட்டியில் விளையாடி இருந்தார். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, 7021 ரன்கள் எடுத்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் புஜாராவின் ரன் வேட்டை

அதிகபட்சமாக 206 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 34 அரைசதங்களும், 19 சதங்களும் அடங்கும். 3 முறை இரட்டைச் சதம் அடித்துள்ளார். இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 21 போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, 5 சதங்கள் மற்றும் 10 அரைசதங்கள் உட்பட 52.77 சராசரியுடன் 1900 ரன்கள் எடுத்துள்ளார். 2018-19 ஆம் ஆண்டில் புஜாரா 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 521 ரன்களுடன் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார் என்பதும், அந்தத் தொடரையும் இந்தியா வென்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள்

முறியடிக்கப்படாத சச்சின் சாதனை

இந்திய அளவில் 100 டெஸ்ட் மற்றும் அதற்கு மேல் விளையாடியவர்கள் பட்டியலில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரே முதலிடத்தில் உள்ளார். அவர், உலக அளவிலும் முதல் இடத்தில் உள்ளார். அவர், 200 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவருடைய இந்த ஒரு சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது. காரணம், சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் விளையாடியவர்கள் எல்லாம் ஓய்வுபெற்றுவிட்டனர். தற்போது இந்திய அளவில் விராட் கோலி 100 டெஸ்ட் போட்டிகளைத் தாண்டியுள்ளார். என்றாலும், இந்த சாதனை அவரால் முறியடிக்கப்படாது என்பது நிதர்சனம்.

காரணம், தற்போது டெஸ்ட் போட்டிகள் குறைந்து வருகிறது. அத்துடன், அவர் 200 போட்டிகள் விளையாடும்வரை ஃபார்மில் இருக்க வேண்டும். இதனால் இந்தச் சாதனை அவ்வளவு எளிதில் முறியடிக்கப்படாது. அதேநேரத்தில், 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடியவர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்து, டிராவிட், லட்சுமணன், அனில் கும்ப்ளே, கபில் தேவ், கவாஸ்கர், வெங்சர்கார், கங்குலி, விராட் கோலி, இஷாந்த் சர்மா, ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக் ஆகியோர் உள்ளனர். டெல்லியில் நடைபெறும் 2வது போட்டியில் புஜாரா விளையாடுவதன் மூலம் இந்தப் பட்டியலில் 13வது வீரராக இடம்பிடிப்பார். 

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com