“விராட் கோலியுடன் ஒப்பிடாதீர்கள்” - எலைட் லிஸ்ட் குறித்து புஜாரா கருத்து
ரஞ்சி டிராபி தொடரில் இரட்டை சதம் அடித்து புஜாரா அசத்தியுள்ளார்.
ரஞ்சி டிராபி போட்டிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சௌராஷ்டிரா அணி 166 ஓவர்கள் விளையாடி 7 விக்கெட் இழப்புக்கு 581 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் புஜாரா 248(390) ரன்கள் குவித்தார். அத்துடன் ஷெல்ட ஜாக்ஷன் 161(299), பிரேராக் மன்கட் 86(86) ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து, கர்நாடக அணி விளையாடி வருகிறது.
இந்தப் போட்டியில் விளாசிய சதத்துடன், முதல்தரப் போட்டியில் தன்னுடைய 50 ஆவது சதத்தை புஜாரா பதிவு செய்துள்ளார். 198 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா இதுவரை 15,436 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 56 அரை சதங்கள், 50 சதங்கள் அடங்கும்.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் புஜாரா, 75 போட்டிகளில் 16 சதம், 24 அரை சதத்துடன் 5740 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் அவர் அரிதாகவே விளையாடினார். 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி 51 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். முதல் தரப் போட்டியில் 50 சதங்கள் அடித்ததன் மூலம், சச்சின், டிராவிட், கவாஸ்கருடன் ‘எலைட்’ பட்டியலில் புஜாரா சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், விராட் கோலியும் எலைட் பட்டியலில் இணைய வாய்ப்புள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு புஜாரா பதில் அளித்தார். “அவர் அதிகப்படியாக முதல் தரப்போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் அவருடன் ஒப்பிட முடியாது. சர்வதேசப் போட்டிகளில் அனைத்து விதமான ஆட்டங்களில் அவர் உச்சத்தை தொட்டுள்ளார். அது, முதல் தரப் போட்டிகளை விட சிறப்பானது. அவர் சர்வதேசப் போட்டிகளில் சதங்கள் அடிப்பது நமக்கு பெருமைதான். முதல் தரப் போட்டியின் சதத்தை, ஒரு நாள் போட்டியுடன் அல்லது டெஸ்ட் போட்டியுடன் ஒப்பிட முடியாது” என்றார்.
விராட் கோலி 116 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 34 சதங்கள் அடித்துள்ளார். 9451 ரன்கள் எடுத்துள்ளார்.