இந்திய கிரிக்கெட் தேர்வு குழுவுக்கு மீண்டும் தலைவரான சேத்தன் சர்மா!

இந்திய கிரிக்கெட் தேர்வு குழுவுக்கு மீண்டும் தலைவரான சேத்தன் சர்மா!
இந்திய கிரிக்கெட் தேர்வு குழுவுக்கு மீண்டும் தலைவரான சேத்தன் சர்மா!

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக சேத்தன் சர்மாவே மீண்டும் தலைவராகி உள்ளார்.

கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தோல்விகண்டு தொடரிலிருந்து வெளியேறியது. இதனால் இந்திய அணி மீது விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த சுனில் ஜோஷி (தெற்கு மண்டலம்), ஹர்விந்தர் சிங் (மத்திய மண்டலம்) மற்றும் தேபாஷிஷ் மொஹந்தி (கிழக்கு மண்டலம்) உள்ளிட்டோர் குழுவை பிசிசிஐ, கூண்டோடு கலைத்ததுடன், புதிய தேர்வுக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

புதிய தேர்வுக் குழு உறுப்பினர்களைத் தேர்வுசெய்ய அசோக் மல்கோத்ரா, ஜக்னி பரண்ஜோ, சுலக்சனா நாயக் உள்ளிட்ட 3 பேர்கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டது. இதற்காக 600 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இறுதியில் 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான நேர்காணல் மும்பையில் நடைபெற்றபோது, அதில் இறுதியாக 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது அதன் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சேத்தன் சர்மாவே மீண்டும் தேர்வுக் குழுத தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில், ஷிவ் சுந்தர் தாஸ், சுபர்ட்டோ பானர்ஜி, சலீல் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ஓர் ஆண்டுக்கு மட்டுமே பதவி வகிப்பர் என தகவல் வெளியாகி உள்ளது. புதியத் தேர்வுக்குழுவால் இந்திய அணி மீண்டும் எழுச்சி பெறும் எனச் சொல்லப்படுகிறது. 2023 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று மகுடம் சூடினால், இந்தக் குழுவே நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com