”No.1 வீரருடன் விளையாடியதே பெரிய விஷயம்” - போராடி தோற்ற பிரக்ஞானந்தா; வெற்றிவாகை சூடிய கார்ல்சன்!

உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா 2வது இடம்பிடித்துள்ளார்.
கார்ல்சன், பிரக்ஞானந்தா
கார்ல்சன், பிரக்ஞானந்தாட்விட்டர்

அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த கார்ல்சனுடன் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா விளையாடினார். மொத்தம், இரண்டு சுற்றுகளை உள்ளடக்கிய இறுதிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் (ஆகஸ்ட் 22) டிரா ஆனது. அதைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 23) நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில், கருப்பு நிற காய்களுடன் பிரக்ஞானந்தா விளையாடினார்.

இந்த இரண்டு ஆட்டமும் டிரா ஆன காரணத்தால் டை பிரேக்கர் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படும் சூழல் உருவானது. இதையடுத்து, இருவருக்குமிடையேயான 2 டை பிரேக்கர் ஆட்டங்கள் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றன. இதில் முதல் டை பிரேக்கர் போட்டி பரபரப்பாக நடைபெற்றது. இருவீரர்களும் வெற்றி வாய்ப்பைப் பெறக் கடுமையாகப் போராடினர். இதில் கடைசிவரை வெள்ளைநிறக் காய்களுடன் போராடிய பிரக்ஞானந்தா இறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தொடர்ந்து, டை பிரேக்கரின் இரண்டாவது போட்டியில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடினார்.

முடிவில் பிரக்ஞானந்தா 1.5-2.5 என்ற கணக்கில் தோல்வியடைந்து இரண்டாவது இடம்பிடித்தார். உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டி வரை நுழைந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா போராடி தோல்வி அடைந்தாலும் அவருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

பிரக்ஞானந்தா தோல்வியடைந்தாலும் அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியுள்ளார், அவருடைய தந்தை. இதுகுறித்து பிரக்ஞானந்தாவின் தந்தை, “உலகின் நம்பர் 1 வீரருடன் விளையாடியது மிகப்பெரிய விஷயம். வெற்றி, தோல்வியைப் பொருட்படுத்தாமல் இதன்மூலம் நல்ல ஆட்டம் கிடைத்தது. வருங்காலத்தில் மேலும் சாதிக்கலாம். இதை தோல்வியாகவே எடுத்துக்கொள்ளமாட்டார் பிரக்ஞானந்தா. வெற்றி, தோல்வி பற்றி எண்ணாமல் அடுத்த நகர்வு நோக்கி பயணிப்பவர் அவர். விடு அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்” என புதிய தலைமுறை வாயிலாக தன்னம்பிக்கை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த பிரக்ஞானந்தா, “இது கஷ்டமான நிகழ்வுதான். ஆனாலும் இறுதிப்போட்டி வரை உற்சாகத்தைத் தருகிறது. கேண்டிடேட் தொடருக்கு தேர்வாவதே எனது இலக்கு; அதுவே மகிழ்ச்சி. செஸ் வளர்ச்சிக்கு எனது தாயின் பங்களிப்பு முக்கியமானது. செஸ் போட்டிக்கு கிடைக்கும் மகிழ்ச்சி ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com