செஸ் உலகின் புதிய சாம்பியன் குகேஷ்... Rf2 ஒற்றை மூவில் காலியான லைரன்..!
செஸ் உலகின் புதிய சாம்பியன் நம் தமிழக வீரர் குகேஷ். 13 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 6.5 புள்ளிகள் எடுத்திருக்க, கடைசி சுற்று பெரும் எதிர்பார்ப்புடன் இன்று மதியம் தொடங்கியது.
14 சுற்றுக்களில் யார் முதலில் 7.5 புள்ளிகள் பெறுகிறார்களோ அவரே உலக செஸ் சாம்பியனாக அறிவிக்கப்படுவார்கள். மன ரீதியாக இந்தத் தொடருக்கு முன்னர் மிகவும் சோர்வாக காணப்பட்டார் சீன வீரர் டிங் லைரன். டிங் லைரன் தான் நடப்பு சாம்பியன் என்றாலும், அவரை வெல்வது சூப்பர் ஃபார்மில் இருக்கும் குகேஷுக்கு எளிதான காரியம் என்றே செஸ் விமர்சகர்களால் பேசப்பட்டுவந்தது. ஆனால் முதல் சுற்றை டிங் லைரன் வென்று பெரும் ஷாக் கொடுத்தார். இந்தத் தொடர் அவ்வளவு எளிதாக முடியாது என்பதை முதல் சுற்றிலேயே நிரூபித்தார் லைரன். இரண்டாவது சுற்று டிரா. மூன்றாவது சுற்றில் பல ஸ்மார்ட் மூவ்களை ஆடினார் குகேஷ். லைரனை அந்த சுற்றில் தவறு செய்ய வைத்தார் குகேஷ். மூன்றாவது சுற்றில் நடந்த போட்டி அட்டகாசமான ஒன்று. அதற்கு அடுத்து நடந்த சுற்றுக்கள் எல்லாமே எளிதாக டிரா நோக்கி நகர்ந்தன.
தொடரில் அடுத்த சுவாரஸ்யமான போட்டி எட்டாவது சுற்று தான். குகேஷ், லைரன் இருவரும் பல நல்ல மூவ்களை ஆடினார்கள். அந்த சுற்றின் 42வது மூவில் குகேஷ் ஒரு பிளண்டர் செய்தார். ஆனால், அதற்கடுத்து சிறப்பாக ஆடி போட்டியை டிரா செய்தார். இருவருக்குமே வெல்வதற்கு அந்தப் போட்டியில் வாய்ப்புகள் இருந்தன. மீண்டும் போட்டிகள் டிராவில் முடிவடைந்து வந்தன.
11வது சுற்றை குகேஷ் வெல்ல ஒட்டுமொத்த இந்திய செஸ் ரசிகர்களும் துள்ளிக் குதித்தனர். இந்த வெற்றி குகேஷ் சாம்பியன் ஆவதை கிட்டத்தட்ட உறுதி செய்தது. இந்தப் போட்டியில் லைரன் தவறு மேல் தவறு செய்தார். குறிப்பாக ஒரு பானைக் காப்பாற்ற 26 (...e6), 28 (...Qc8) அவர் விளையாடிய இரண்டு மூவ்களும் மிகப்பெரிய பிளண்டர்கள் .
இந்த போட்டியில் queen sac அடித்து தன் வெற்றியை உறுதி செய்தார். ஆனால், அடுத்த போட்டியிலேயே வென்று விஸ்வரூபமெடுத்தார் லைரன். இந்த சீசனில் 12வது சுற்று போட்டியில் மட்டுமே டிங் லைரன் ஒரு சாம்பியனுக்கான துணிச்சலுடன் அநாயசமாக ஆடினார். 13 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 6.5 புள்ளிகளுடன் இருக்க, இறுதி போட்டி பெரும் எதிர்பார்ப்புடன் இன்று நடந்தது.
இன்று போட்டி முடிந்து டிங் லைரன் பேசுகையில், "இந்த ஆண்டு நான் விளையாடிய சிறந்த தொடர் இதுதான். நாளை போட்டி இல்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை" என்றார். உண்மையில், டிங் லைரன் மன ரீதியாக பெரும் சோர்வுடன் காணப்பட்டார். செஸ் சாம்பியன் என்றாலே, ஒரு சீசனில் எல்லா தொடர்களையும் எளிதாக வெல்வார்கள். ஆனால், டிங் லைரனின் டிராக் ரெக்கார்டு நேர்மாறாக இருந்தது. ' நாளை போட்டி இல்லை' என அவர் சொன்னது, அவர் மன ரீதியாக எவ்வளவு களைப்புடன் இருக்கிறார் என்பதைக் காட்டியது. இந்தத் தொடர் குகேஷ் தவறிழைத்து, லைரனுக்கு வெல்லும் வாய்ப்பைக் கொடுத்தாலும், அதையும் டிராவாகவே மாற்றினார். கிட்டத்தட்ட ஒரு safe game மனநிலையுடன் போட்டிகளை எதிர்கொண்டார்.
14வது சுற்றை டிரா செய்யும் நோக்கத்துடன் ஆடினார் லைரன். 30 வது மூவ்க்கு பிறகு இதுவொரு 'டெட் டிரா' என்பதை எல்லோருமே அறிந்திருந்தார்கள். ஆனாலும் குகேஷ் விடவில்லை. எப்படியும் லைரன் தவறு செய்வார் என்கிற நம்பிக்கையில் விடாமல் ஆடினார் குகேஷ். same color bishop, rook ending டிராவை உறுதி செய்தது. ஆட்டம் இன்னும் இருபது மூவ் நீடித்தது. சொல்லி வைத்தாற் போல், 52வது மூவில் Rf2 என ஆடினார் லைரன். அந்த மூவ் விளையாடிய அடுத்த கணம் அது எவ்வளவு பெரிய பிளண்டர் என்பது லைரனுக்கு தெரியும். போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லோருக்கும் தெரியும். ஒரு பான் டவுனில், பீஸ் எக்ஸ்சேஞ்ச் செய்ய யாருக்குத்தான் துணிவு வரும். கடவுளுக்கு நன்றி சொன்னார் குகேஷ். தன் வாழ்வின் மிகச்சிறந்த தருணம் இதுதான் என லைரன் விளையாடிய இந்த மூவைக் குறிப்பிட்டார் குகேஷ். லைரன் அந்த மூவ் வைத்தவுடன், உலகின் இளம் செஸ் சாம்பியன் என்கிற வரலாற்று சாதனையை குகேஷ் படைத்துவிட்டார் என்பது உறுதியாகிவிட்டது. குகேஷின் 12 வருட தவம் நிஜமானது.
உலக செஸ் சாம்பியன் என்னும் மகுடத்தை ஆனந்துக்குப் பின்னர் இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக கொண்டு வந்திருக்கிறார் குகேஷ். அதுவும் 18 வயதில். செஸ் உலகின் ஜாம்பாவான்களான கேரி கேஸ்பராவும், மேக்னஸ் கார்ல்செனும் 22 வயதில் சாதித்ததை 18 வயதில் சாதித்திருக்கிறார் குகேஷ். குகேஷ், அர்ஜுன் எரிகஸி, பிரக், விதித் குஜராத்தி என உலகின் டாப் வீரர்களில் இந்திய வீரர்களே அதிகம்.
அடுத்து நடக்கவிருக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் இரண்டு இந்தியர்களுக்கு மத்தியில் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.