உலக செஸ் சாம்பியன்ஷிப்: இந்தியாவுடன் மோதும் சீனா... பட்டத்தை வெல்வாரா குகேஷ்? தற்போதைய நிலவரம் என்ன?
இந்தியாவைப் பொருத்தவரை செஸ் போட்டி என சொன்னாலே தமிழ்நாடுதான் நினைவுக்கு வரும். ஏனென்றால் செஸ் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் அந்தளவுக்கு பல சாதனைகள் செய்துள்ளனர். இந்தியாவில் உள்ள 85 ஆண் கிராண்ட் மாஸ்டர்களில் 29 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதே இதற்கு உதாரணம்...
அதே போல் 23 பெண் கிராண்ட் மாஸ்டர்களில் 8 பேர் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் உள்ளனர். அதிலும் தற்போது ஆக்டிவாக உள்ள முதல் 10 ஆண் கிராண்ட் மாஸ்டர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், பெண்களில் 3 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இதில் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தவிர தமிழகத்தில் சசிகிரண், ஆர்.பி.ரமேஷ், தீபன் சக்ரவர்த்தி, சுந்தர்ராஜன் கிடாம்பி, ஆர்.ஆர்.லட்சுமண், பி.மகேஷ் சந்திரன், எம்.ஆர்.வெங்கடேஷ், எஸ்.அருண் பிரசாத், பி.அதிபன், எஸ்.பி.சேதுராமன், எம்.ஷியாம் சுந்தர், வி.விஷ்ணு பிரசன்னா, கார்த்திகேயன் முரளி, வி.ஆர்.அரவிந்த் சிதம்பரம் மற்றும் அஸ்வின் ஜெயராம், கே.பிரியதர்ஷன், என்.நாத், ஆர்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ், பி.கார்த்திகேயன், என்.ஆர்.விசாக், பி.இனியன், ஜி.ஆகாஷ், ஆர்.வைஷாலி ஆகியோர் கிராண்ட்மாஸ்டராக உள்ளனர்.
தற்பொழுது சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ், சீனாவின் டிங் லிரனை வீழ்த்தும் முயற்சியில் இன்று களமிறங்கி உள்ளார். இதில் குகேஷ் வெற்றிப்பெற்றால் இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்ப்பதுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பெருவார்.
யார் இந்த டி குகேஷ்?
குகேஷ், 29 மே, 2006 அன்று சென்னையில் பிறந்தார். அவரது தந்தை டாக்டர் ரஜினிகாந்த் ENT ஸ்பெஷலிஸ்ட். அவரது தாயார் டாக்டர் பத்மா ஒரு நுண்ணுயிரியல் நிபுணர்.
குழந்தைப்பருவத்தில் அனைவரும் ஏதாவது ஒரு கலையைக் கற்பது போன்று குகேஷ், ஏழு வயதில் சதுரங்கத்தை கற்க ஆரம்பித்தார். இவரது செஸ் ஆர்வத்தை கண்ட பயிற்சியாளர்கள், தொடர்ந்து இவருக்கு பயிற்சி அளித்து வந்ததுடன், பல போட்டிகளில் பங்கேற்க வைத்தனர்.
இவரது சாதனைகள்
2015 ஆம் ஆண்டு 9 வயதுக்குட்பட்ட பிரிவில், ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றார். அந்த வெற்றியைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு 12 வயதுக்குட்பட்ட பிரிவில் உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
12 வயதில், 2018 ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப்பில் U-12 தனிநபர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ், U-12 டீம் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் மற்றும் U-12 தனிநபர் கிளாசிக்கல் வடிவங்களில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றார்.
மார்ச் 2017 இல், 34வது Cappelle-la-Grande Open இல் சர்வதேச மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார். 2023ல் 2750 ரேட்டிங்கைப் பெற்று உலகை திரும்பிப்பார்க்கவைத்தார்.
இவரது விடாமுயற்சியால் 2024 இல் டிங் லிரனுக்கு எதிரான உலக சாம்பியன்ஷிப்பில் விளையாட இவருக்கு இடம் கிடைத்தது.
இன்றைய போட்டியின் தற்போதைய நிலவரம் என்ன?
இன்று நடைப்பெறும் போட்டியில் குகேஷ் வெற்றி பெற்றால் விஸ்வநாத் ஆனந்திற்கு அடுத்ததாக இரண்டாவது உலக செஸ் கிராண்ட்மாஸ்டர் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெறுவார். தற்போது இந்த போட்டி டிராவை நோக்கி சென்றுகொண்டுள்ளது. 2 மணி நேரத்துக்கு மேலாக தொடரும் இன்றைய போட்டி சமனில் முடிந்தால், நாளை மீண்டும் இருவருக்குள்ளும் போட்டி நடக்கும்.