FIDE CHESS WORLD CUP | ஃபைனலில் திவ்யா தேஷ்முக்... 100 மூவ்... எப்படி வென்றார்..!
பெண்களுக்கான செஸ் உலகக்கோப்பைக்கு முதல் முறையாக ஒரு இந்தியர் தகுதி பெற்றிருக்கிறார். 19 வயதான இன்டர்நேஷனல் மாஸ்டர் திவ்யா தேஷ்முக் இந்த சாதனையை செய்திருக்கிறார். 100 மூவ் நீடித்த போட்டியில் வென்று கிராண்ட் மாஸ்டருக்கான பரிந்துரையும் பெற்றிருக்கிறார். கேண்டிடேட்ஸ் தொடரில் விளையாடுவதற்கான தகுதியும் பெற்றிருக்கிறார். தன்னைவிட அனுபவசாலியான சீன வீராங்ககை டேன் ஜொங்கியை எப்படி வென்றார் திவ்யா தேஷ்முக்.
இந்தத் தொடர் முழுக்கவே திவ்யா தேஷ்முக்கிற்கு நிறைய கடினமான போட்டிகள் இருந்தன. 19 வயதான திவ்யா தேஷ்முக் இன்னும் கிராண்ட் மாஸ்டர் தகுதிகூட பெறவில்லை. இந்தத் தொடரில் 15வது சீடாக களம் இறங்கிய திவ்யா தொடர்ந்து வென்றுவருகிறார். நாக் அவுட் தொடரில் தொடர்ச்சியாக சீனியர் வீரர்களுடன் போட்டி போட்டு விளையாடி வெல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நான்காவது சுற்றில் சீனாவின் ஜூ ஜினரை வீழ்த்தியவர், ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் சக வீரரும் கிராண்ட் மாஸ்டருமான ஹரிகா த்ரோனாவள்ளியை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. டை பிரேக்கர் வரை சென்ற போட்டியில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார் திவ்யா . நான்காவது சுற்றும் டை பிரேக்கர் வரை சென்றது.
இப்படியான சூழலில் தான் நேற்றைக்கு முன் தினம் அரையிறுதி சுற்றின் முதல் போட்டி நடந்தது. Queen's Gambit Declined ஓப்பனிங்கில் நடைபெற்ற அந்த போட்டி 30 மூவில் டிரா ஆனது. இரண்டாவது சுற்றில் திவ்யாவுக்கு ஒயிட் காயின்களுடன் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் அவருக்கு சிறு அட்வான்டேஜ் இருந்தது. இந்த சுற்று Alapin Sicilian Defense ஓப்பனிங்கில் விளையாடினார்கள்.
1.e4 c5
2.Nf3 e6
3.c3 Nf6
4.e5 Nd5
5.d4 cxd4
6.cxd4 d6
7.a3 dxe5
8.dxe5 Be7
14வது மூவிலேயே சென்டர் போர்டை முழுமையாக ஆக்கிரமித்தார் திவ்யா தேஷ்முக்.
கிட்டத்தட்ட 40வது மூவிலேயே எண்டுகேமுக்கு வந்துவிட்டது இந்த போர்டு. இரண்டு பான் லீடுடன் , திவ்யா ரூக் நைட்டுடனும், டேன் ஜொங்கி பிஷப், ரூக்குடன் விளையாடினர். இரண்டு பான் லீடை அப்படியே வைத்துக்கொண்டு N*B என எக்ஸ்சேஞ்ச் செய்தார் திவ்யா. b ரோவில் இருக்கும் பானை நகர்த்திக்கொண்டே டேன் ஜொங்கியை மேலும் இறுக்கினார் திவ்யா.
டேன் ஜொங்கி டிராவுக்கு ஆடினாலும், தொடர்ந்து திவ்யா வெற்றி நோக்கி போட்டியை நகர்த்தினார். நாற்பதாவது மூவ்க்குப் பிறகு ஆட்டம் கிட்டத்தட்ட அறுபது மூவ் நீடித்தது. அதில் ஒரு பிளண்டரைக்கூட திவ்யா செய்யவில்லை. மெது மெதுவா கிங்கை b ரோ பான் பக்கம் நகர்த்தியதாகட்டும், டேன் ஜொங்கியின் கிங்கை h ரோவுக்குள் முடக்கியதாகட்டும் எல்லாமே ஸ்மார்ட் . நூறு மூவ் முடிந்ததும் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு ரிசைன் செய்தார் டேன் ஜொங்கி.
H ரோ பானை ரூக் வைத்து எளிதாக கட்டுக்குள் வைக்க முடியும். அதே போல், திவ்யாவின் அடுத்த மூவ் Ke4 ஆக இருக்கும் என்பதால், F ரோ பானும் பாதுகாப்பாகிவிடும். டேனின் கிங் F பானுக்குப் பின்னாலும், திவ்யாவின் கிங் F ரோ பானுக்கு முன்னும் இருப்பதால் இதில் திவ்யாவிற்கு எளிதான வெற்றியைப் பெற்றுத்தரும். கூடவே திவ்யாவிற்கு பெரிதாக நேர அழுத்தமும் இல்லை என்பதால் டேன் ஜொங்கிக்கு ரிசைன் செய்வதைத் தவிற வேறு வழியில்லை.
இதன் மூலம் பெண்கள் செஸ் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக ஒரு இந்தியர் தகுதி பெற்றிருக்கிறார். அதோடு இந்த வெற்றியின் மூலம் கேண்டிடேட்ஸ் தொடருக்கும் தகுதி பெற்றிருக்கிறார் திவ்யா. கிராண்ட் மாஸ்டருக்கான பரிந்துரையும் பெற்றிருக்கிறார்.
இன்னொரு அரையிறுதி சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் கொனிரூ ஹம்பியும், சீனாவின் லீ டிங்ஜியும் மோதினர்கள். முதல் சுற்றைப் போலவே இரண்டாவது சுற்றும் டிரா ஆனது. அதனால், இன்று இவருக்கும் இடையே டை பிரேக்கர் முறையில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.